Followers

Sunday, October 7, 2012

மனிதா...............


******************************
~~~~~~~
மனிதா...............


எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோவினை செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திரு…
க்கிறான். (அல் குர்ஆன் 33: 57)

 அல்லாஹ்தஆலாவுக்கு அதிருப்தியான காரியத்தைச் செய்பவர்கள். அவன் பொருந்தாததைச் செய்பவர்கள் என்பது அதன் கருத்து. ஈமான் கொள்ளாதிருத்தல், அவன் கட்டளைகளுக்கு மாறு செய்தல், தங்களது இச்சைகளைப் பின்பற்றுதல், இறைவனுக்கு மக்களிருப்பதாகவும், அவனுக்கு இணை துணை இருப்பதாகவும் கருதுதல், அவனது ஆற்றலை மறுத்தல், காலத்தைத் திட்டுதல், அல்லாஹ்வின் வலிமார்களை நிந்திப்பது அல்லாஹ்வை நிந்திப்பதாகும். அவ்வாறானவர்களை தன்னுடன் போரிட வருமாறு அல்லாஹ் அழைக்கின்றான். அல்லாஹ்வின் சின்னங்களை பழிப்பதும், ஏளனமாகக் கருதுவதும் அல்லாஹ்வை நிந்திப்பதாகவே கருதப்படும்.பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஆலிஹி வஸல்லம் அவர்கள் பண்பு, குடும்பம், மார்க்கம் என்பனவற்றில் குற்றம் குறை காண்பது, நபியவர்களின் தரத்தினை மரியாதைக் குறைவாகக் கருதுவது அவர்களைப் புலவர், சூனியக்காரர் பைத்தியக்காரர் என்று கூறுதல், நபியவர்களின் அருமை மனைவிமார்களைப் பழித்தல், ஸஹாபாக்களை அவமதித்தல், இவற்றைத் தவிர புண்படும்படியான காரியங்களைச் செய்த யாவரும் அல்லாஹ்தஆலாவின் ரசூலை நோவினை செய்தவர்களாகவே கருதப்படுவார்கள்.எனது குடும்பத்தினரை கோபிக்காதீர்கள். இன்னும் எனது ஸஹாபாக்களைப் பழிக்காதீர்கள். அவ்வாறு அவர்களைப் பழிப்பதும் கோபிப்பதும் என்னைப் பழிப்பதற்குச் சமனானதாகும் என்றும் நபியவர்கள் நவின்றிருக்கின்றார்கள்.


நபிகள் பெருமானார் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சொல்லாலோ செயலாலோ நோவினை செய்வது ஹராமாகும் என்பதை எல்லா அறிஞர்களும் ஏகமனதாகக் கூறியிருக்கின்றனர். பெருமானார் அவர்கள் அணிந்த ஜுப்பாவை ஒரு முஸ்லிம் வேண்டுமென்று அண்ணளாரை அவமதிக்கும் எண்ணத்தில் அது அசுத்தமாக இருக்கிறது என்று கூறினால் கூட அது அவனை மதம் மாற்றத்திற்குத் தள்ளிவிடும்.

நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எவர்கள் எதிர்க்கின்றார்களோ அவர்கள் மிகத் தாழ்ந்தவர்கள் (அல்குர்ஆன் 58:20)

எனவே, அல்லாஹ் ரசூலுடைய விடயங்களில் தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் மேற்கொள்வது எவ்வாறு அல்லாஹ்வையும் அவனது ரசூலையும் நிந்திப்பதாகக் கருதப்படுமோ அவ்வாறே அவ்விருவருடைய ஏவல் விலக்கல்களுக்கு மாறு செய்வதும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நோவினை செய்வதாகவே கருதப்படும்.




நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி
விளக்கம்: எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்கும்படி அல்லாஹுவும் அவனுடைய தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் கூறுவது ஒருபுறமிருக்க, மேல்கூறும் பாடல், ஷாஹுல் ஹமிது வலியுல்லாவிடம் (அல்லாஹ் மிக நன்கறிந்தவன்) தேவையை கேட்டு போகச் சொல்லுகின்றது, அல்லாஹுவிற்கு மாத்திரம் பிரார்த்திக்கும்படி சொல்லப்பட்ட வணக்கத்தை, அல்லாஹுவின் படைப்புக்கும் செலுத்தும்படி கூறுவது, அல்லாஹுவிற்கு இணைவைக்கும் செயலில்லாமல் வேறு என்ன?

அல்லாஹ் அல்லாதவர்களால் எதையும் கொடுக்க முடியாது. அல்லாஹ் 
கூறுவதைக் கேளுங்கள்..

1. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன, அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகளெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கமாட்டார்கள், செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள், கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள். 35: 13,14
2. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. 22: 73
3. நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! 7: 194
4. ”நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன, அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. 46:4,5
5. மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் – நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 40: 20

 எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக...


அஹமட் யஹ்யா...
ஹொரோவபதான.
அனுராதபுரம்.....

நடைமுறை வாழ்வில் நாவால் செய்யப்படும் தீமை.....




நடைமுறை வாழ்வில் நாவால் செய்யப்படும் தீமை.....

__________________________________________

இறையச்சமுள்ள அடியான் நல்லதையே பேச வேண்டும்.

¨ நேர்மையானவற்றை மட்டும் பேசுபவர்களது செயல்களை அல்லாஹ் சீராக்கி வைப்பான்.

¨ அத்தகையவர்களது (ஏனைய) பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்.

¨ நா காக்கும் நல்லடியார்களை அல்லாஹ் தனது அன்புக்கும், அருளுக்கும் சொந்தமாக்கிக் கொள்கின்றான்.

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:

¨ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும் [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].

¨ யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் [அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].

¨                                                          
                

“அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றனர். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர். [அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]

நாம் சில வேளைகளில் நல்லதா கெட்டதா எனச் சிந்திக்காமலேயே சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். அவை நல்லதாயின் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். மாறாக அவை கெட்டதாயின் அவ்வார்த்தைகளே நம்மை நரகிற் தள்ளிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி]

வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி – கிண்டல் செய்தல், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், ஆபாசப் பாடல்களைப் பாடுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக!

இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல், இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல், சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லோரின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி எம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போமாக!

அஹமட் யஹ்யா...
ஹொரோவபதான.

அனுராதபுரம்....


"உலகம் முழுவதும் இன்பமானது அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி........










அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயர் கொண்டு.....



"உலகம் முழுவதும் இன்பமானது
அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள
மனைவி........

மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய
நோக்கமாகும்....
    


[ கணவனின் வாரிசைச் சுமக்கப் போகும் பெண் சிறந்த ஈமானிய உணர்வுள்ள பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். பயிர் செழித்து வளர முதல் தகுதி விதையிடப்படும் நிலம் நல்லதாக இருத்தல் மிக அவசியம்.

நற்குணம் என்பது மறுமையில் நியாயத்தராசுத் தட்டில் மிகவும் கனமானது. அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.

"ஒருவருக்கு நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் கையில் உள்ளது" என்று கூறி, அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது ஒரு முஃமீனுக்கு அழகல்ல. ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும்.

எத்தனை வீடுகளில் மனைவி தொழும்போது அல்லது குர்ஆன் ஓதும்போது தொந்தரவு செய்கின்ற பிள்ளைகளைக் கணவன்மார்கள் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றோ, தொழுகை நேரம் வந்து விட்டால், ‘தொழுதுவிட்டு வா, அதுவரை நான் அடுப்பைக் கவனிக்கிறேன்’ என்றோ கூறுகிறார்கள்?. நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும்.]
"உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி"
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


முன்னுரை:                                            

இன்றைய உலகில் இஸ்லாமியக் குடும்பச்சூழல் மிகவும் இன்றியமையாதது. அன்பும் பண்பும் இரக்கமும் பணிவும் வீரமும் பொறுமையும் கொண்ட உம்மத்துக்களை உருவாக்க வேண்டியப் பெரும் பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்ததாகும். ஒரு குடும்பம் இஸ்லாமின் அடித்தளத்தைக் கொண்டு கட்டப்பட்டால் அதிலுள்ள முஃமீன் செங்கல்கள் மிக வலுவானதாக, உறுதிமிக்கதாக இருக்கும்.

ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர் அடங்கியதாகும். குடும்ப வாழ்க்கையில் பிரதான பாத்திரங்கள் வகிப்பது கணவன் மற்றும் மனைவியே. குடும்ப வாழ்க்கை என்பது அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்த ஒரு கொடையாகும். அதைத் தம்பதியினர் முழுமையாக இம்மைக்கும் மறுமைக்கும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய ஒழுங்குகளின் காலடிச் சுவட்டில் நடந்தார்களேயானால், இம்மை மற்றும் மறுமை வாழ்வு அமைதி தரக்கூடியதாய் இருக்கும். "ஒரு குடும்பத் தலைவன், தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். குடும்பத் தலைவி தன் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள்" (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு அஸ்ஸன்னீ).

சுயம்வரம்: கணவன் மனைவிக்கிடையில் புரிதலும் அன்பும் கருணையும் சகிப்புத்தன்மையும் மிக முக்கியம். "உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்தது நற்குணமுள்ள மனைவி" (அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்).

கணவனின் வாரிசைச் சுமக்கப் போகும் பெண் சிறந்த ஈமானிய உணர்வுள்ள பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். பயிர் செழித்து வளர முதல் தகுதி விதையிடப்படும் நிலம் நல்லதாக இருத்தல் மிக அவசியம்.

நற்குணம் என்பது மறுமையில் நியாயத்தராசுத் தட்டில் மிகவும் கனமானது. அழகுக்கும் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நற்குணமுள்ள பெண்ணைத் திருமணம் செய்யவே ஆண்கள் முன்வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்ணே கணவனிடம் அன்பும் பரிவும் காட்டுவாள். விட்டுக்கொடுத்து வாழ்க்கையை ஒளிமயமாக்குவாள். அதையேதான் மணமகனைத் தேர்வு செய்வதற்குப் பெண்ணும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும்.
மாமியாராகப் போகும் பெரும்பாலான தாய்மார்கள் தனக்கு வரும் மணமகளிடம் பணமும் அழகும் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். பெண் பார்ப்பதை ஒரு சடங்காக்கி வைத்திருக்கிறார்கள். தன் மகனின் வாரிசைச் சுமந்து, பெற்று, வளர்க்கப் போகும் பெண்ணிடம் நற்குணமும் பொறுமையும் ஈமானும் இருக்கிறதா என்று தேடாமல், அழகும் அந்தஸ்தும் உடைய பெண்ணைத் தேடி அலைகிறார்கள்.

சில ஆண்கள் குணவதியைத் தேடினாலும், பல தாய்-தந்தையர் அதற்குத் துணை போவதில்லை. தன் மகனை வளர்க்கவும் படிக்க வைக்கவும் செலவழித்த பணத்தை மீட்டிக் கொள்ள, பணம் காய்ச்சி மரங்களை விரும்புகின்றனர். உமர் ரளியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்த சமயத்தில் பால் கறந்து விற்றுப் பிழைப்பை நடத்தும் ஒரு பெண், "பாலோடு தண்ணீரைக் கலப்படம் செய்து" விற்குமாறு கூறிய தன் தாய் பேச்சைக் கேட்காமல், வறுமையிலும் அல்லாஹ்வின் உவப்பையே ஆசை வைத்தாள்.
அதனை அறிந்த கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் மகனின் சம்மதத்தைப் பெற்று, அந்தச் சாதாரண நிலையில் மேலான ஈமானிய உணர்வுள்ள பெண்ணைத் தம் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அந்தப் பெண்ணுடைய ஈமானிய இரத்தத்தில் (வம்சத்தில்) வந்தவரே ஐந்தாவது கலீபா என்று புகழாரம் சூட்டப்படும் உமர் பின் அப்துல் அஜீஸ். ஆனால் இக்காலத்தில் சிலர் ஆலிமாப் பெண்களை மணக்க முடிவு செய்து, மணம் முடிக்கின்றனர். அப்படி திருமணம் முடித்த ஆலிமாக்களில் சிலர் தங்கள் படிப்பை ஏட்டுச்சுரைக்காயாக ஆக்கி விடுகின்றனர். இன்னும் சிலரைக் கணவன்மாரே வீட்டுக்குள் பூட்டி வைக்கின்றனர். ஆக இஸ்லாமைத் தொலைத்த திருமணங்களும் இஸ்லாத்தைத் தேடாத திருமணங்களுமே பெருமளவில் நடைமுறையில் உள்ளன.

சில பகுதிகளில் திருமணத்திற்குப் பிறகு கணவன் தன் மனைவியைச் சார்ந்து அவள் வீட்டுக்கே நிரந்தரமாகக் குடிபெயர்ந்து வாழ்க்கை நடத்துகிறார். இதுபோன்ற தவறுகளைக் களைந்து இஸ்லாத்தை நிலைநிறுத்துகின்ற திருமணமே சிறந்த குடும்பச் சூழலை ஏற்படுத்தும். திருமணம்: "உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காக, நீங்கள் அமைதி பெறுவதற்காகப் படைத்து, உங்களிடையே அன்பையும் கனிவையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்துச் செயற்படும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் பல உள்ளன" (அல்குர்ஆன் 30:21).
மனஅமைதி பெறுவதே திருமணத்தின் உயரிய நோக்கமாகும்
ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். மனைவி கணவனுக்கு மனஅமைதியும் மகிழ்ச்சியும் இன்பமும் தருபவளாக விளங்க வேண்டும். கணவனும் தன் மனைவிக்குப் பாதுகாப்பும் நிம்மதியும் தருபவனாக இருக்க வேண்டும். நல்ல இல்லறத்திற்கு ஒருவர் மற்றவருக்கு எல்லா விஷயங்களிலும் துணை நிற்க வேண்டும்.

நேர்வழி:                                                  

தம்பதியர் ஒருவர் மற்றவரை நேர்வழியின்பால் துணைக்கு அழைப்பவராக இருக்க வேண்டும். நன்மையை நோக்கி அழைப்பவராக இருக்க வேண்டும்.
தன் பொறுப்பு குறித்து ஒவ்வொருவருக்கும் விசாரணை உள்ளது. "ஒரு நேர்மையான மனைவியானவள் இந்த உலக வாழ்க்கையிலும் ஆன்மீகத் துறையிலும் (தன் கணவனுக்கு) உதவக்கூடியவளாக இருப்பாள். அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையில் மிகப்பெரும் அருட்கொடையாகும்" (நூல்: பைஹகி, சஹீஹ் அல் ஜாமிஃ).
ஒவ்வொரு கணவனும் மனைவியும் இதையே தன் மனதிற் கொள்ள வேண்டும். உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டபோது, உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள்: "நீர் நல்ல மனிதராக இருக்கிறீர். ஆனால் சிலைகளை வணங்கும் மூடராக இருக்கிறீர். அதை விடுத்து ஏக இறைவனை ஏற்றால் உம்மை மணம் செய்துக் கொள்வேன்" என்றார்கள். அபுதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாத்திற்கு மாறியதையே மஹராக ஏற்று உம்மு ஸுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவரை மணம் செய்து கொண்டார்கள்.
"ஒருவருக்கு நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் கையில் உள்ளது" என்று கூறி, அதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது ஒரு முஃமீனுக்கு அழகல்ல. ஒருவர் மற்றவருக்கு இபாதத்துக்களின் கதவுகளை திறக்க ஆசை காட்ட வேண்டும். எத்தனை வீடுகளில் மனைவி தொழும்போது அல்லது குர்ஆன் ஓதும்போது தொந்தரவு செய்கின்ற பிள்ளைகளைக் கணவன்மார்கள் ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றோ, தொழுகை நேரம் வந்து விட்டால், ‘தொழுதுவிட்டு வா, அதுவரை நான் அடுப்பைக் கவனிக்கிறேன்’ என்றோ கூறுகிறார்கள்?.
நேர்வழியில் நடப்பதற்கு ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும். பயான்கள் நடைபெறும் கூட்டத்திற்குத் தன்னுடன் குடும்பத்தாரை அழைத்துப் போகவேண்டும். குழந்தைகள் பயான் கேட்கும்போது படுத்தினால், முறை மாற்றி இருவரும் குழந்தைகளைக் கவனித்தும் பயான் கேட்டும் வரவேண்டும். அதில் நன்மைகள் ஏராளம். ஒருவர் மற்றவருக்கு, தான் கேட்டதை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும்; கலந்துரையாடல்கள் செய்ய வேண்டும்.


அன்பும் பரிவும் நம்பிக்கையும்:         

மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதன்முறை வஹீ வந்தபோது அவர்கள் மிகவும் பயந்து போனார்கள். அவர்கள் "என்னைப் போர்த்துங்கள்", "என்னைப் போர்த்துங்கள்" என்றபடி வீட்டுக்கு வந்தார்கள். தனக்கு ஏதும் ஆகிவிடுமோ எனப் பயந்துபோயிருந்த நபியவர்களிடம் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அழகாக ஆறுதல் கூறினார்கள்: "நீங்கள் உறவினருடன் இணங்கி வாழ்கிறீர்கள். சிரமப்படுவோருக்கு இரங்குகிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். சோதனைக்கு உட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள். உங்களுக்கு அல்லாஹ் நன்மையையே கொடுப்பான்" என்று தேற்றினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தனை பண்புகளுக்கும் சொந்தக்காரராக, பண்பாளராக இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு தன் கணவரை ஒரு கிறிஸ்துவ வேதகரிடம் அழைத்து சென்று இது நபித்துவம் எனப் புரிந்து கொள்கிறார்கள். ஒரு பேயோட்டியிடமோ, மந்திரவாதியிடமோ தன் கணவரை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அழைத்துப் போகவில்லை. அந்தக் காலத்தில் அப்படிபட்ட அறியாமை எண்ணங்களே சமூகம் முழுக்க வியாபித்து இருந்தது. ஆனால், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பண்பின் உறைவிடமாகத் திகழ்ந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா பற்றி சிலாகித்து சொன்னார்கள்: "என்னை மக்கள் பொய்ப்படுத்தியபோது அவர் மெய்பித்தார். புறக்கணித்தபோது அவர் என்னை நம்பினார். மக்கள் விரட்டியபோது என்னை அரவணைத்தார். அவர் மூலம் மட்டுமே அல்லாஹ் எனக்குப் பிள்ளைகளைக் கொடுத்தான்" (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அஹ்மது). என்று மனம் நெகிழ தம் அன்பு மனைவியை அடிக்கடி நினைவு கூர்ந்திருக்கிறார்கள். எத்தகைய நம்பிக்கை அந்த மனைவிக்குத் தன் கணவனிடம் இருந்திருக்கிறது?
இப்போதுள்ள இல்லறங்களில் நம்பிக்கையற்ற நிலையைப் பார்க்கிறோம். சண்டை சச்சரவுகளை அதிகம் கேள்விப்படுகிறோம். "உங்களில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவர்தான்" (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, திர்மிதி). அப்படிபட்ட சகிப்புத்தன்மையும் பொறுமையும் தம்பதியினருக்குத் தேவை. ஆடை: "அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை" (திருக்குர்ஆன் 2:187). ஆடை ஒருவரின் மானத்தைக் காக்கிறது; கண்ணியத்தைக் கொடுக்கிறது; வெளியிலுள்ள மாசுகளிலிருந்து காக்கிறது.
அதேபோல் ஒரு கணவன், தன் மனைவியைப் பாதுகாக்கும் அரணாகவும் கண்ணியத்தையும் அவளுடைய உரிமைகளையும் கொடுப்பவராக இருத்தல் அவசியம். ஒரு மனைவி, தன் கணவனின் மானத்தையும் கண்ணியத்தையும் உடமைகளையும் காப்பவளாக இருத்தல் அவசியம். ஒருவருக்கொருவர் இரகசியங்களைப் பாதுகாப்பவர்களாகத் தம்பதிகள் திகழ வேண்டும் மனைவி மீது கணவனுக்குள்ள உரிமைகள்: "ஐவேளை தொழுது, நோன்பு நோற்று, தன் கற்பைப் பாதுகாத்து, தன் கணவனுக்குக் கட்டுபட்டு நடக்கும் ஒரு பெண், அவள் விரும்பிய வாசல் வழியாகச் சுவனம் புகுவாள்" (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு ஹிப்பான்).


                                                                          
கணவனின் திருப்தியைப் பெறுபவளாக மனைவி
இருத்தல் வேண்டும்.  
                        

கணவனுக்குக் கட்டுப்படுதல் என்றால் ஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்தாலே அவனுள் மகிழ்ச்சி பொங்க வேண்டும். அவனுக்காகவே தன் அலங்காரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். வேலையிலிருந்து வீடு திரும்பும் கணவனை எத்தனை மனைவியர் மலர்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள்? கணவனுடைய களைப்பை நீக்க முயற்சி செய்கிறார்கள்? அவன் மனசு குளிர விருப்பமானதை சமைத்து வைக்கிறார்கள்? அவனுடைய உறவுகளைப் பேணி நல்லவிதமாக நடக்கிறார்கள்? ஒரு பெண் சுவனவாதியா? நரகவாதியா? என்பதை, அவள் தன் கணவனிடம் நடந்து கொள்ளும் முறையை வைத்து முடிவு செய்து விடலாம்.
கணவன் வெறுக்கும் விஷயங்களைத் தன் இல்லத்தை விட்டும் விலக்கி விடுவது நன்மையானதாகும். கணவனுடைய அமானத்தை, பொருளாதாரத்தை விரயம் செய்யாமல், கஞ்சத்தனம் செய்யாமல் ஒரு நல்ல மனைவி, நடுநிலையாகச் செலவு செய்ய வேண்டும். "தம் கணவரின் உடமைகளைப் பேணிக்காப்பதில் குறைஷிப் பெண்களே சிறந்தவர்கள்" (அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த பெண்ணுக்கு உரைகல் கூறுகிறார்கள். கணவனின் செல்வத்திலிருந்து மனைவி தர்மம் செய்தால், அவளுக்கும் அதே அளவு நன்மை எழுதப்படுகிறது.


                                                                 
கணவன் மீது மனைவிக்குள்ள உரிமைகள்:
"பெண்களிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்" (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ, முஸ்லிம்). என்றும் "நீ உண்ணும்போது அவளுக்கு உணவு கொடு. நீ (உடை) உடுக்கும்போது அவளுக்கும் உடை கொடு. அவர்களை முகத்தில் அ,டிக்காதே. இழிவாகப் பேசாதே. வீட்டிலே தவிர (பொது இடத்தில்) அவளைக் கண்டிக்காதே" என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கணவன்மார்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். (முஆவியா இப்னு ஹய்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூது).
பெண்கள் ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்கள். பலவீனமான அவர்கள் விஷயத்தைக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகம் எச்சரித்துள்ளார்கள். ஆண்தான் பெண்ணை நிர்வகிக்கும் கடமையைப் பெற்றிருப்பவன். குடும்பத்திற்குச் செலவிட வேண்டியது ஆணுக்குத்தான் கட்டாயம். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற வேண்டியதும் அவனே. ஒரு கணவன் தன் மனைவிக்குரிய கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும். பெண்கள் மென்மையானவர்கள். அவர்களிடம் விட்டுக் கொடுத்து, தன்மையாக நடக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி தங்கள் குடும்பத்தாருடன் வாழ்ந்தார்கள் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் காலணிகளையும் தங்கள் ஆடைகளையும் தாங்களே தைத்துக் கொள்வார்கள். தங்கள் ஆடையை, தாமே சுத்தம் செய்வார்கள். ஆட்டில் பால் கறப்பார்கள். வீட்டு வேலைகளும் செய்வார்கள்" (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அஹ்மது). இப்படிப்பட்ட அழகிய முன்மாதிரி ஒவ்வொரு முஸ்லிம் கணவரும் பின்பற்றுவதற்குத் தக்கதாய் இருக்கிறது.


                                                                     
இஸ்லாமினால் ஒளிர்வது:        
ஒவ்வொரு தம்பதியினரும் இஸ்லாமைக் கொண்டு துலங்கும்போதுதான் தங்கள் வாழ்வில் அமைதியை நிலை நாட்டி, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமையைச் செய்து, நீதமாக நடுநிலையோடு இஸ்லாமியக் குடும்பமாக செயலாற்ற முடியும். அப்போதுதான் நம் குழந்தைகளும் நம்மைப் பார்த்து இஸ்லாமிய வார்ப்பில் உருவாகும். உறவுகள்: "உறவுகளைச் சேர்த்துக் கொள்பவனை நானும் சேர்ப்பேன். துண்டிப்பவனுடன் நானும் துண்டித்துக் கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்" (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்).
உறவுகளைப் பேண வேண்டும்:
இன்று உள்ளூரில் வசிக்கும் பிள்ளைகளுக்கே பெரும்பாலும் தங்கள் உறவுகளைத் தெரிவதில்லை. உறவுகளை அறிமுகம் செய்ய வேண்டும். அவர்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்தி அன்பளிப்புகளின் மூலம் அன்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நாளைய இஸ்லாமிய உம்மத்:
ஒவ்வொருவரும் தன் வீட்டினருக்கு ஸலாம் கூற வேண்டும். சாந்தியும் சமாதானமும் மிக அவசியமான இடம் நம் இல்லங்கள். அது அல்லாஹ்வின் அருளாகும். பிள்ளைகளுக்கு உணவும் உடையும் தருவது ஒரு தந்தையின் கடமையாகும். "தான் உணவளிக்க வேண்டியவர்களைப் பசியில் வாட விடுவது ஒரு குடுப்பத் தலைவனுக்குப் பாவத்தால் போதுமானதாகும்" (அப்துல்லா இப்ன் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்). பிள்ளைகளுக்கு உணவு பரிமாறும்போது ஆண்பிள்ளைக்கு என்று அதிகம் ஒதுக்கி வைப்பது மிக மோசமான செயல்.
நம் கண்களில் ஒன்றுக்கு மட்டும் அலங்காரமா? பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அதைத் தவிர்த்து, ஆண்-பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாப் பிள்ளைகளையும் சமமாக நடத்த வேண்டும். உண்ணும்போது முடிந்தவரை கூட்டாக, குடும்ப அங்கத்தினர்கள் அமர்ந்து உண்ண வேண்டும்
.

                                                                       
நேசத்தை வெளிக்காட்டுவது:
"நம் சிறியவர்களிடம் அன்பைச் செலுத்தாதவர் நம்மை சார்ந்தவர் அல்லர்" (நூல்: அஹமத்).
குழந்தைகளிடம் நம் பாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.
"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குழந்தைகளை அணிவகுக்க செய்து "முந்தி என்னிடம் ஓடிவருபவருக்கு இன்னின்ன கொடுப்பேன்" என்று கூறுவார்கள். பிள்ளைகள் ஓடிவந்து அவர்களின் மடியிலும், நெஞ்சிலும் விழுவார்கள்" (அஹமத்).
நம் நேசத்தை வெளிப்படுத்துவதன் மூலம், பிறரிடம் நேசம் செலுத்த நம் பிள்ளைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். கல்வி: ஒருவர் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் "ஒரு பிள்ளைக்குத் தன் தந்தை மீதான கடமை என்ன?" என்று கேட்டபோது, உமர் ரளியல்லாஹு அன்ஹு சொன்ன மூன்று கடமைகளில் ஒன்று "கல்வியளிக்க வேண்டும்" என்பதாகும்.
பள்ளிக் கல்வி மட்டுமின்றி, தீனுடைய கல்வியும் பிள்ளைகளுக்குக் கொடுக்கப் பட்டால்தான் நம் பிள்ளைகள் நல்ல முஃமீனாக இந்த உலகில் இஸ்லாமை நிலை நிறுத்தக் கூடியவர்களாக உருவாகி வருவார்கள். "அல்லாஹ், தான் நாடியோருக்குக் கல்வி ஞானத்தை வழங்குகின்றான். ஞானம் வழங்கப்பட்டோர் ஏராளமான நன்மைகளை வழங்கப்பட்டுவிட்டனர். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் சிந்திப்பதில்லை" (அல்குர்ஆன் 2:269).
கல்வி புகட்டுவதில் பிள்ளைகளுக்கிடையில் பாரபட்சம் காட்டக் கூடாது. இருபாலருக்கும் கல்வி மிக அவசியம். அதுவும் பெண் குழந்தைகளுக்குப் புகட்டப்படும் கல்வி, அவள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய அறிவைத் திரட்டிக் கொள்வது தலையாயது ஆகும். இன்று ஏடுகளில் மட்டும் இஸ்லாம் இருப்பதற்கான மூலகாரணி, நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கல்வியை நாம் ஊட்டி வளர்க்காததுதான். ஓர் இல்லம் இஸ்லாமிய இல்லமாகத் துலங்கக் கல்விதான் அடித்தளம்.
நன்றாகப் படிக்கின்ற ஆண்பிள்ளைகளைக்கூட சில தாய்மார்கள் "இவ்வளவு செலவு செஞ்சு படிக்க வேண்டுமா? உன் வயசு பசங்க சம்பாதிக்கிறார்கள்" என்று சொல்லி முடக்க பார்க்கிறார்கள். அறியாமை இருளைப் போக்கிட கல்வியின் ஒளி கட்டாயம் தேவை. சமத்துவம்: பிள்ளைகள் இருபாலரையும் சமமாக நடத்த வேண்டும். குழந்தைகளிடையே அன்பளிப்புச் செய்யும்போது கூட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமமாக அன்பளிப்புக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தியுள்ளார்கள் (நுஃமான் இப்ன் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).
ஆண்பிள்ளைகள் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்று பல தீமைகள் இன்று நம் பெண்களிடம் காணப்படுகிறது. அதைவிடுத்து நபிவழிப்படி எல்லாக் குழந்தைகளையும் ஆண்பிள்ளை/பெண்பிள்ளை என்ற பாகுபாடு காட்டாது பார்க்க வேண்டும். இருபாலருக்கும் சிறு,சிறு வீட்டுப் பணிகளைச் செய்யப் பழக்க வேண்டும். நற்பண்புகள் மலரவிட வேண்டும்:
"உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக நெருப்பிலிருந்து காத்திக் கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 66:6).
நற்பண்புகள் வளர, நன்மை அதிகரித்துத் தீமை விலக, தொழுகை அவசியம். அது மானக்கேடானவற்றையும் தீயதையும் தடுக்கும். "பிள்ளைகளுக்கு ஏழு வயதாகிவிட்டால் தொழகைக்கு ஏவுங்கள். 10 வயது ஆகியும் தொழாவிட்டால் அடியுங்கள். படுக்கையைப் 10 வயதில் பிரித்து விடுங்கள்" (அம்ர் இப்ன் ஷுஐப் ரளியல்லாஹு அன்ஹு ரளியல்லாஹு, நூல்: அபூதாவூத்).
வயிற்றுப் பசிக்கு உணவு தேவைப் படுவதுபோல் ஆன்மாவுக்கு உரமும் உணவும் சத்தும் மிக அவசியம். குர்ஆன் ஓதக் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நிறையப் பெற்றோர் இவ்விஷயத்தில் பாராமுகமாக உள்ளனர். குர்ஆனுடைய மக்களாகக் குழந்தைகளை வளர்த்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் குடும்பங்களில் தீன் பரிணமிக்கும். அது ஒவ்வொரு பெற்றோருக்கும் கடமையாகும். பிள்ளைகளின் சிநேகிதங்களை நன்மை பயக்க கூடியதாக இருக்கிறதா? என்று கண்காணித்தல் அவசியம். சகோதரத்துவம், மன்னித்தல், பொறுமை, உயர்குணம், நன்மையை ஏவித் தீமையை தடுத்தல், விட்டு கொடுத்தல் ஆகியவற்றைப் போதிக்க வேண்டும். பல் துலக்குவதிலிருந்து, உடற்பயிற்சி வரை அவர்களுக்கு அவசியமானவற்றை உணர்த்த வேண்டும்.


                                                                                            

செலவிடல்:

"மனிதன் செலவிடும் தீனாரில் மிக்கச் சிறந்தது, அவன் தன் குடும்பத்திற்குச் செலவிடும் தீனாரே" (ஸவ்ஃபான் பின் புஜ்துத் ரளியல்லாஹு அன்ஹு ரளியல்லாஹு, நூல்: முஸ்லிம்). நமது பிள்ளைகளின் உள்ளத்தின் தாகத்திற்கு இஸ்லாமியப் புத்தகங்களும் அறிவு வளர்க்கும் புத்தகங்களும் மன மகிழ்ச்சிக்கு விளையாட்டுப் பொருட்களும் வாங்கிக் கொடுக்க வேண்டும். சில பெற்றோர் தங்களுக்கு சென்ட்டும் நகையும் பட்டும் வாங்குவதில் பணம் செலவழிக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் விஷயத்தில் கணக்குப் பார்க்கிறார்கள். பிறருக்கு தர்மம் செய்யும்போது நல்லதையே மனமுவந்து தரவேண்டும்; அதை நம் பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்.
இளமைப் பருவம்:
பெற்றோர் பிள்ளைகளுடன் கலந்து பேச வேண்டும். அவர்களுக்கு நீதத்தையும் நன்மையையும் இளமையில் இபாதத்துகளுக்கு அர்ஷின் நிழல் இருப்பதையும் பற்றிய விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். பிள்ளைகள் வாலிபப் பருவத்தில் பெரும்பாலும் தடுமாற்றத்திற்கு உள்ளாவார்கள். திருமணக் கனவுகள் கலர்கலராகக் காணுவது நிஜமாகாது; நிதர்சன வாழ்க்கை வேறு என்பதை சஹாபியாக்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலமாகப் புரிய வைக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் வாழ்க்கைப்பட்டு போகும் பெண், குடும்ப பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும்போது திணறிப் போவாள். சரியான இஸ்லாமிய வழிகாட்டல் இல்லாமை அவளுடைய வாழ்க்கையை, அவள் குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும். அவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்ற தாய்மார்கள் கண்டிப்புடன் நடக்க வேண்டிய நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பிள்ளைகளுடன் தோழமையுடன் நடந்து கொள்ள வேண்டும். "தாய்தான் தோழமைக்கு முதன்மையானவள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.


                                                                     
பெற்றவர்கள்:                         

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு ஹஜ்ஜுடைய தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது, ஒரு மனிதர் தன் தாயைச் சுமந்தவராக கஃபாவை வலம் வந்து கொண்டிருந்தார். அவர் இப்னு உமரிடம் "நான் யமனிலிருந்து மக்காவுக்கு என் தாயைச் சுமந்தவனாக ஹஜ் செய்ய வந்துள்ளேன். நான் என் தாய்க்கு நன்றிக் கடன் செலுத்திவிட்டேனா?" என்று கேட்டார். அதற்கு இப்ன் உமர் ரளியல்லாஹு அன்ஹு, "அவர் வயிற்றில் உன்னைச் சுமந்து இருக்கும்போது விட்ட மூச்சுக்குக் கூட நீ ஈடு செய்யவில்லை." என்றார்கள். (அபூ புஸ்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அதபுல் முஃப்ரத்).
பெற்றோருக்கு என்னதான் செய்தாலும் அவர்கள் செய்ததற்கு ஒருவர் ஈடுசெய்ய முடியாது. பெற்றோருக்கு நன்மை செய்யாமல் இருப்பது பாவமாகும். அவர்களை நோவினை செய்வது பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் உவப்புக்காக வயதான பெற்றோரிடம் அன்பும் அரவணைப்பும் காட்ட வேண்டும், அவர்களின் சொத்துக்காக அல்ல. "பெற்றோரை நோவினை செய்வதையும் தம் கடமையை நிறைவேற்றாமல் இருப்பதையும் அல்லாஹ் வெறுக்கிறான்" (அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்).
இதிலிருந்து, பெற்றோரை நோவினை செய்பவன் சுவனம் புகமாட்டான் என்பது புரிகிறது. வயதான பிறகு அவர்களிடம் பரிவும் அக்கறையும் அன்பும் இன்சொல்லும் அரவணைப்பும் காட்ட வேண்டும். பெற்றோருக்குச் செய்ய வேண்டிய துஆ அழகான பொருள்பட உள்ளது. "யா அல்லாஹ்! சிறுவயதில் என் பெற்றோர் என்னைக் கனிவுடன் பராமரித்தது போல், அவர்களை நீ பராமரிப்பாயாக" என்று இறைமறை கற்றுத் தந்தவாறு அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும். இல்லம்: ஒரு முஃமீனின் இல்லம் அவன் உள்ளத்தை பிரதிபலிக்கக் கூடியதாக உள்ளது.
தகடு-தாயத்து என்று அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் சமாச்சாரங்கள் அற்றதாக, மூடநம்பிக்கைகளை ஒழித்ததாக, வீண் ஆடம்பரம் இல்லாததாக வீடு இருத்தல் அவசியம். இஸ்லாம் தடை செய்துள்ள சீரியல், சினிமாப் பாட்டுகள், ஜோசியம், வாஸ்து போன்றவை விலக்கப்பட வேண்டும். ஃபாத்திஹா, மௌலூது, ஹல்கா போன்ற இஸ்லாத்தில் இல்லாத, அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்ற விஷயங்கள் வீட்டு எல்லைக்குள் நுழைந்திடாமல் பாதுகாக்க வேண்டும். இல்லம் என்பது ஒருவருக்கு மன அமைதி தருகின்ற இடமாகும். அது இஸ்லாமிய மணம் கமழ இருத்தல் தக்வாவுக்கு உரமூட்டக் கூடியதாகும். நாயும் உருவப் படங்களும் அருள் கொண்டு வரும் மலக்குகளின் வருகையைத் தடுத்துவிடும்.
"அல்லாஹ்வை நினைவுகூரப்படும் இல்லமும் நினைவுகூரப்படாத இல்லமும், உயிருள்ளவன் மற்றும் இறந்தவன் நிலைக்கு ஒப்பானதாகும்" (நூல்: முஸ்லிம்).
திருமறை இல்லாத வீடாக ஒரு முஸ்லிமுடைய வீடு இருக்கக் கூடாது. தர்ஜுமா குர்ஆன்கூட இல்லாது பல வீடுகள் இன்னும் இருப்பது வேதனை அளிக்கிறது! ஒரு முஃமீனானவனின் உள்ளம் திருமறையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். "சூரா அல்பகறா ஓதப்படும் வீட்டிலிருந்து ஷைத்தான் வெருண்டோடுகிறான்" (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்).
குர்ஆன் என்பது அலமாரிகளில் பூட்டி வைப்பதற்கு அருளப் பட்டதல்ல. அதை ஓதிச் சிந்திப்பதற்கே இறைவன் அருளினான். ஷைத்தானிய சக்திகளை விரட்டக்கூடியதாக வீடு இருத்தல் அவசியம். வீட்டிற்குள் நுழையும்போது, வெளியே செல்லும்போது, கழிவறையைப் பயன்படுத்தும்போது, தூக்கத்தின் முன்னும் பின்னும், சாப்பிடும்போது ஓத வேண்டிய துஆக்கள் ஓதப்பட வேண்டும். நஃபிலான தொழுகைகளை வீட்டில் தொழவேண்டும். "வீடுகளிலும் உங்கள் தொழுகைகளை வைத்துக் கொள்ளுங்கள். அவற்றை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்" (இப்ன் உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி).
ஃபர்ளான, சுன்னத்தான அமல்களைக் கொண்டு வீட்டை உயிர்ப்பிக்க வேண்டும். ஒரு முஸ்லிமுடைய இல்லம் இஸ்லாமியப் புத்தகங்களைக் கொண்டிருக்க வேண்டும். நம் வீட்டுச் சமையலறையில் உப்பு இல்லாவிட்டால் உடனே வாங்குகிறோம். அதற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட நம் மார்க்கத்தின் மூலாதாரமான குர்ஆனுக்கும் நபிமொழி தொகுப்புகளுக்கும் பல இல்லங்களில் கொடுக்கப் படுவதில்லை. நபி அவர்களை நேசிக்கிறோம் என்கிறோம். ஆனால், நபிகளாரது வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் ‘ரஹீக்’ என்ற நபிவரலாறு எத்தனை வீடுகளில் இருக்கிறது? இனியாவது சிந்திப்போம் வாழ்வை சீர்படுத்திக்கொள்வோம்.

அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான
அனுராதபுரம்...

SRI LANKA

*******************************************************

ஹஜ் பயணம்......


ஹஜ் பயணம்......
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

ஹஜ் பயணம்..

நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்என்ற உணர்வுடன் கூடும் இடமே ஹஜ்.


ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:197)
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.9:36


அமல்களில் சிறந்தது எது? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவதுஎன்று விடையளித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதுஎன்றார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 26, 1519


ஹாஜிகள் கவனிக்க வேண்டியவை...
புனித ஹஜ்ஜுக்குப் போய் வருவதற்கு- ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தை மட்டுமே பயண்படுத்துங்கள். பல்வேறு சிரமங்களுக்குக் கிடையே செய்யும் புனிதப் பயணம், விழலுக்கு
இறைத்த நீராக வீணாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

                                                  
உற்றார் உறவினர், உடன் பிறந்தோர், அண்டை அயலார், அனைவரிடமும் விடை பெறும் போது- அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு- பிராயச் சித்தம் தேடியவர்களாப் புறப்படுங்கள்.கடன்கள் இருந்தால்- கொடுத்து முடித்து- அல்லது போய் வந்த பிறகு இன்ஷா அல்லாஹ் தருவதாக வாக்களித்து, கடன் கொடுத்தவுர் அதை மனமார ஏற்றுக் கொண்டால் மட்டுமே, ஹஜ்ஜுக்குப் புறப்பட ஆயத்தமாகுங்கள்.
                                                        
                                                    
புகழுக்காகவும், பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் இல்லாமல் மெய்யாகவே இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்தை இதயத்தில் வைத்துப் புறப்படுங்கள்.

                                                             
பயணத்தின் போது, வகை வகையான உணவுகளுக்கு முக்கியத்துவம் தராமல், எளிமைளான உணவுப் பழக்கத்தைக் கடைப் பிடியுங்கள். வழிப் பயணம் இலகுவாக இருக்கும்.குறிப்பாக, ஹஜ்ஜுடைய நாட்களில், மினா அரபாத், முஸ்தலிபா, ஆகிய இடங்களில் எளிமையான உணவுகளை உண்ணுங்கள். அதிக நெரிசல் மிகுந்த இடங்களில் உங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்ற அதிக நேரம் காத்திருக்க வேண்டி வரும்.

                                                                
பல்வேறு குண நலன்கள் கொண்ட பலருடன் சேர்ந்து பயணம் மேற் கொள்ளும் போது, எல்லா வகையிலும் அணுசரித்துப் போகப் பழகிக் கொள்ளுங்கள். பொறுமையைக் கடைப் பிடியுங்கள்.

                                                               
புனித ஹஜ்ஜுக்குப் புறப்பட்டதிலிருந்து- திரும்பவும் உங்கள் இல்லம் வந்து சேரும் வரை- வழிப் பயணத்திலும், புனிதத் தலங்களில் தங்கியிருக்கும் போதும், சக ஹாஜிகளுடன் அன்பாகப் பழகி, ஒருவருக் கொருவர் உதவியாக இருங்கள். எந்த வகையிலும் பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.

                                                               
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பொன்னான வாய்ப்பை அடையப் பெற்றிருக்கிறீர்கள். வீண் பேச்சுக்கள், விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், ஆகியவற்றைத் தவிர்த்து, அதிகமதிகம் இறைவணக்கத்தில் பொழுதைக் கழியுங்கள்.

                                                              
மக்காவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுல் ஹராமிலும், மதீனாவில் தங்கியிருக்கும் நாட்களில், மஸ்ஜிதுன்னபவியிலும், ஐவேளைத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதில் கவனம் செலுத்துங்கள். இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

                                                             
உடன் வரும் சக ஹாஜிகள்- முதியவர்களாக இருப்பின், அனைத்து வகையிலும் அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து, அரவணைத்துச் செல்லுங்கள். அப்படி ஒரு முதுமை நமக்கு ஏற்படும்போது- நமக்கு உதவ சிலரை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

                                                           
அவசரத்திற்கு தேவைப்படும் மருந்து வகைகளையும், முதலுதவி மருந்துகளையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
                                                          
உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1521, 1819, 1920


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,அனுராதபுரம்.
SRI LANKA
***********************************************
 

வரதட்சனை அவனுக்கா? அவளுக்கா?


 
 இஸ்லாத்தில்  வரதட்சனை
வரதட்சனை அவனுக்கா? அவளுக்கா?
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

                                                      வரதட்சனை அவனுக்கா? அவளுக்கா?

வரதட்சனை என்ற கொடுமையான சமூக தீமையை இந்த முஸ்லிம் சமுதாயம்
விட்டொழிக்காதவரை இத்தகைய உபதேசம் கண்டிப்பாக அரங்கேறும்.                                                   
இளைஞர்கள் பெண்களிடம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றனர்;
ஒட்டுமொத்த சமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால்
வரதட்சனை கொடுக்க வசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு
செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை
இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய விளைவுகளையும் சந்தித்தே தீரும்.

எட்டு வருடங்கள், ஏழு வருடங்கள் அறபிக் கால்லூரிகளில மார்க்க அறிவைப் படித்துவிட்டு திருமண நேரத்தில் மாத்திரம் இஸ்லாத்தை உருமாற்றி விடும் எத்தனையோ உலமாக்களைப் பார்க்கின்றோம். இதில் வெளிநாடுகளில் படித்து விட்டு வரும் பட்டதாரிகளும் விதிவிலக்கானவர்களல்ல.

சீதனக்கொடுமையால் முஸ்லிம் சமூகமே சீரழியும் இந்நேரத்தில் மிம்பர் மேடைகளில் அதனைக் கண்டிக்காமல் அச்சீதனத் திருமணங்களிலும் கலந்து சிறப்பித்து வரும் இவ்வறிஞர்களை என்னவென்று அழைப்பது?தீர்ப்பாளர்களுக்கெல்லாம் தீர்ப்பாளன் அல்லாஹ் இவர்களுக்கும் இந்த வழியில் வாழையடி வாழையடியாக
வேர் தழைக்கும் அத்துனை பேருக்கும் போதுமானவன்,

இஸ்லாமியத் திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மணமகன் மஹர் கொடுத்துத்தான் திருமணம் முடிக்க வேண்டும். ஆனால், தான் கொடுப்பதற்குப் பதிலாக, தனக்காக எல்லாத் தியாகங்களையும் செய்ய முன் வந்து வாழ்க்கைத் துணைவியாக வரப்போகும் மனைவியிட மிருந்தே வரதட்சணையாக ஒரு பெரும் தொகையையோ, பொருளையோ வாங்குவது தன்மானமில்லா கேவலமான ஒரு விஷயமாகும்.

வரதட்சணை வாங்குவதால் ஒரு குடும்பத்துக்கு மாபெரும் அநீதம் செய்கிறோம். அது மட்டுமல்லாமல் அவர்களை கடனிலும், வறுமையிலும் ஆழ்த்தி, அந்தக் குடும்பத்தையே அழிக்கிறோம் என்பதை வரதட்சனை வாங்கும் மணமகனும், மணமகனின் குடும்பத்தாரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அநீதம் செய்வதால் ஏற்படும் நிலைகுறித்து இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும், அநியாயக்காரர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை நாம் தயாராக வைத்துள்ளோம். அல்குர்ஆன் (25:37)

தனக்கும் பிற குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான வேதனையில் இருப்பார்கள் என கூறுகிறது. அல்குர்ஆன் (42:45)

சமூகத்தில் தலைவிரித்தாடும் பாரிய சமூகக்கொடுமை வரதட்சனை. இந்தக்கொடுமையை ஒழிக்க நம் இளைஞர் சமூதாயம் முன் வர வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் மானத்தையும், மாரியாதையையும் குழிதோண்டிப் புதைத்த இக்கொடுமையை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் இச்சமூகத்தின் அனைத்து சக்திகளும் ஒன்றுதிரள வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் இக்கொடுமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க மார்க்க அறிஞர்கள் முன்வரவேண்டும்.

முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு அது பாடப்புத்தகமாக தெரியவில்லை.

இல்லற வாழ்கையில் இருவரும் மகிழ்சி அடையும் போது இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. ஆனால் திருமறைக் குர்ஆனோ வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.

ஆணும் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டாம்! பெண்ணும் ஆணுக்குக் கொடுக்க வேண்டாம் என்று கூறாமல் ஆண்கள் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் - இயக்கமும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.

யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்பதை தான் நியாயமானது. அறிவுப்- பூர்வமானது. என்பதைச் சிந்திக்கும் போது உணரலாம்.

மணவாழ்வில் இணையும் இருவரும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.

ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் மணக்கொடைக்கு அளவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.

பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மண முடிக்க வேண்டிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெண்களிடமே கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணரவேண்டும். கொடுக்காமல் இருந்தது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு குற்றங்களைச் சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.

இன்று சிலர்கள் யாருக்கும் தெரியாமல் ஒலிவு மறைவாக லட்சங்கள்
வாங்குகின்ற காட்சியை நாம் காண்கின்றோம்..சில வேளை அந்த ஒலிவு
மறைவு வெளிப்படையாக விளங்கி விட்டால் என்ன சொல்கின்றார்கள்
தெரியுமா? நாங்கள் அப்பனத்தை திருப்பி கொடுத்து விடுவோம் என்று
வாயில் உப்பைப்போட்டு விட்டு சொல்லும் ஆண்களையும் நாம் நம்
ஊர்களில் காணமுடியும்.

எனவே ஆண் சமுதாயமே இந்த வார்த்தைகளை யார் உங்களுக்கு சொல்லித்தந்தது இப்படி மார்க்கம் சொன்னதா? இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா? இதே நிலையில் மலக்கல் மௌத் வந்து கூப்பிட்டால்
உங்கள் உப்பில்லாத வார்த்தைக்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்..

இளைஞ்சர்களே! நன்றாக சிந்தனை செய்யுங்கள்..
இன்பத்தை அனுபவிப்பது நீங்கள் தான் என்று கனவு காணாதீர்கள்
இருவரும் சேர்தே!!!!என்பதை யாரும் மறுக்கவும் மறக்கவும் முடியாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
 அஹமட் யஹ்யா,,,
 ஹொரோவபதான,அனுராதபுரம்.
SRI LANKA...
******************************************************
AHAMED YAHYA---
**********************************************************************************