Followers

Sunday, October 7, 2012

நடைமுறை வாழ்வில் நாவால் செய்யப்படும் தீமை.....




நடைமுறை வாழ்வில் நாவால் செய்யப்படும் தீமை.....

__________________________________________

இறையச்சமுள்ள அடியான் நல்லதையே பேச வேண்டும்.

¨ நேர்மையானவற்றை மட்டும் பேசுபவர்களது செயல்களை அல்லாஹ் சீராக்கி வைப்பான்.

¨ அத்தகையவர்களது (ஏனைய) பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான்.

¨ நா காக்கும் நல்லடியார்களை அல்லாஹ் தனது அன்புக்கும், அருளுக்கும் சொந்தமாக்கிக் கொள்கின்றான்.

நாவைப் பேணுவதன் அவசியம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்:

¨ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கின்றவர் நல்லதைப் பேசட்டும். அன்றேல், மௌனமாக இருக்கட்டும் [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].

¨ யார் தனது இரு தாடைகளுக்கிடையே உள்ளதை (நாவை)யும், இரு தொடைகளுக்கிடையே உள்ளதை (மர்மஸ்தானத்தை)யும் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ, அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் [அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்].

¨                                                          
                

“அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டிய ஒன்றை எனக்குச் சொல்லித் தாருங்கள்” என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது இரட்சகன் அல்லாஹ் என்று கூறி, பின் அதிலேயே நிலைத்திரும்” என்றனர். (மீண்டும்) “அல்லாஹ்வின் தூதரே, என்மீது நீங்கள் பயப்படக்கூடிய மிகப் பயங்கரமான விடயம் எது” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்து, “இதைத்தான் (பயப்படுகிறேன்)” எனக் கூறினர். [அறிவிப்பவர்: ஸுப்யான் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: திர்மிதி]

நாம் சில வேளைகளில் நல்லதா கெட்டதா எனச் சிந்திக்காமலேயே சில வார்த்தைகளைப் பேசிவிடுகிறோம். அவை நல்லதாயின் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். மாறாக அவை கெட்டதாயின் அவ்வார்த்தைகளே நம்மை நரகிற் தள்ளிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடியான் அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு சொல்லை நாவினால் மொழிகின்றான். ஆனால் அதில் அவன் கவனஞ் செலுத்துவதில்லை. எனினும் அந்தச் சொல்லின் காரணத்தால் அல்லாஹ் அவனது தகுதியை உயர்த்திவிடுகிறான். இவ்வாறே அடியான் இறைவனுக்குக் கோபம் உண்டாக்கக் கூடிய ஒரு சொல்லை அலட்சியமாகச் சொல்லிவிடுகிறான். அச்சொல்லே அவனை நரகில் தள்ளிவிடுகிறது”. [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி]

வீண் வார்த்தைகள் பேசுதல், பொய்யுரைத்தல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பிறரைப் பரிகசித்தல், கேலி – கிண்டல் செய்தல், அவதூறு கூறுதல், சாபமிடுதல், குறை கூறுதல், காரணமின்றி ஏசுதல், இட்டுக்கட்டிப் பேசுதல், ஆபாசமான வார்த்தைகளைப் பேசுதல், ஆபாசப் பாடல்களைப் பாடுதல், பட்டப் பெயர் சொல்லுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் போன்றன அன்றாடம் நாவினால் ஏற்படும் பாவச் செயல்களாகும். இஸ்லாம் இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது. இவை தீயோரின் அடையாளங்கள் என்று சுட்டிக் காட்டுகிறது. எனவே, இவற்றை விட்டும் நம் நாவைக் காத்துக் கொள்வோமாக!

இஸ்லாம் சுட்டிக் காட்டும் பண்புகளான நல்லவற்றைப் பேசுதல், உண்மை உரைத்தல், மென்மையாகப் பேசுதல், ஸலாமைப் பரப்புதல், இறைவனைத் துதித்தல், ஸலவாத்துச் சொல்லுதல், நேர்மையானவற்றைப் பேசுதல், நேரடியாகவும் தெளிவாகவும் பேசுதல், சத்தியத்தைப் போதித்தல், நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் போன்ற அனைத்தும் நல்லோரின் பண்புகளாகும். எனவே, இவற்றைச் செயற்படுத்தி சுவனத்தின் சொந்தக்காரர்களாக நாமும் மாறி எம்மைச் சார்ந்தோரையும் அதன் வாரிசுகளாக்க முயற்சிப்போமாக!

அஹமட் யஹ்யா...
ஹொரோவபதான.

அனுராதபுரம்....


No comments:

Post a Comment