ஒற்றுமை.எனும் கயிறு.
பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....
புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு
நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி
(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும்
உண்டாகட்டுமாக.
ஒற்றுமை.எனும் கயிறு..
சத்தியம் வந்தது ! அசத்தியம் அழிந்தது !! அசத்தியம் அழிந்து போகக்குடியது !!!.
ஆயிரம் கைகள் மறைத்தாலும் (சூரியன்) மறைவதில்லை அந்த படைத்த ரப்புல் ஆலமீன்
நாடினாலே தவிர......
நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக்
கொள்ளுங்கள்” நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ்
உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (3:103)
வீட்டுக்கு வீடு சண்டையில் தொடங்கி, நாட்டுக்கு நாடு இரத்தம் ஓட்டுவது
வரை, ஒற்றுமை என்ற சொல்லே முஸ்லிம்களிடம் கேலிப் பொருளாகிப் போனது. ஐந்து
அறிவு படைத்த மிருகங்கள் கூட உணவிற்காவே அன்றி கொலை செய்வதில்லை; சண்டை
போடுவது இல்லை. அவை தன் இனத்தைக் கொல்வதில்லை. ஆனால் ஆறாம் அறிவு என்ற
பகுத்தறிவு ஆற்றலைப் பெற்ற, ஆகாயத்தைத் தொடும் அளவு உயர்ந்த நம் மனித
சமுதாயம் மட்டும் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில் தீராத வேட்கை கொண்டு
திரிகிறது.
நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு
முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு
சென்றார்கள். அது, "கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை;
அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய
சமநிலைச் சமுதாயப் பிரகடனமாகும்.
இவ்வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு.
நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத்
தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத்
திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்.
மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்.
இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்.
(5:3)
கண்ணியத்தைப் பேணி,கற்பொழுக்கத்தை நிலை நாட்டி,காட்டு
மிராண்டித் தனத்தை ஒழித்து,கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து,ஒற்றுமை என்னும்
கயிற்றைப்பற்றி பிடித்து வாழவேண்டும்.
(மனித சமுதாயமே) உங்கள்
இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி
(வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்:
உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். ( 7:3)
நாம் அனைவரும்
ஒருசமூக மக்கள்; ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் இறைவனின் அடிமைகளே..!
வாழ்வும் வாழ்வாதாரங்களும் வல்லோன் வழங்குபவை. பிரிவை அழித்து, உறவை
வளர்த்து, சமூக ஒற்றுமை காண்போம், இஸ்லாம் கூறும் வழியில்.
(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் – அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்)
தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை. (112 :1-4)
நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ் ஆயத்தப் படுத்தி
வைத்திருக்கும் அற்புத ஆசனங்களைக் காட்டிலும் இவ்வுலக அற்ப ஆசனங்களின்மீது
கொண்ட அடங்காத பேராசையால், சொந்தச் சகோதரனைப் போட்டுத் தள்ளுவதில்,
போட்டுக் கொடுப்பதில் முஸ்லிம்களின் அமைப்புகள் தொடங்கி அரசுகள் வரைக்கும்
ஒன்றேபோல் செயற்படுகின்றன.
முஸ்லிம்கள் தங்களுக்குள் துணை
நிற்பதில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு
உவமையாக, "இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு கட்டடத்தைப்
போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது"
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்படிக் கூறும்போது தங்கள்
கைவிரல்களை ஒன்றோடொன்று பின்னிக் காட்டினார்கள்.
கட்டி அடுக்கி
எழுப்புவதால் 'கட்டடம்' என்றானது. முஸ்லிம்கள் ஒருவரோடொருவர் பிணைந்திருக்க
வேண்டியதை, "கட்டடம்" உவமை மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுருங்கக்கூறி
விளக்கினார்கள். அண்ணலாரின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் சமுதாயமாக
இருப்பதால்தான் நம் சமகால முஸ்லிம் சமுதாயம் உலகளாவிய அலட்சியத்துக்கும்
அவமானத்துக்கும் உள்ளாகிறதென்றால் மிகையில்லை.
சமுதாயம் ஒற்றுமையாக வாழ்வதற்காக அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் நேரான வழியை காட்டி இருக்கின்றனர்.
விரோதமும் பகைமையும் பாராட்டி சிதறிக் கிடந்த சமூகத்தை ஓரிறைக் கொள்கைதான் ஒற்றுமையாய் சங்கமிக்க வைத்தது.
அபூசீனிய அடிமை பிலால் (ரலி), அவர்களை விலைக்கு வாங்கி விடுதலை செய்த
எஜமான் அபூபக்ர் (ரலி), செல்வச் சீமான் முஸ்அப் இப்னு உமைர் (ரலி),
இஸ்லாத்திற்காக இன்னுயிரை நீத்த முதற் தம்பதிகள் சுமைய்யா மற்றும் யாஸிர்
(ரலி), வீரச் சிங்கம் அலி (ரலி), இவர் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்ற
நற்சான்று பெற்ற உமர் (ரலி), யமன் தேசத்திலிருந்து கப்பலில் பயணித்து மதீனா
வந்தடைந்த அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி), சத்தியத்தைத் தேடி பாரசீகத்திலிருந்து
பல வருடங்கள் பயணித்து வந்த ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) ஆகிய பலதரப்பட்டோர்
ஓரணியில் முஹாஜிர்களாக (இஸ்லாத்திற்காக நாடு துறந்தவர்களாக) நிற்க,
யூதர்களின் சதிவலையில் சிக்கித் தவித்து அவ்ஸ் என்றும் கஸ்ரஜ் என்றும்
காலங்காலமாக கலவரங்கள் செய்து, தொடர் போராளிகளாய் காட்சியளித்த
மதீனாவாசிகள் அனைவரும் கைகோர்த்து அன்ஸாரிகளாக (இஸ்லாத்தின் உதவியாளர்களாக)
மறுபுறம் ஒற்றுமையாய் நிற்கின்றார்கள்.
இந்த இரு அணியினரையும்
இணைக்கும் கண்கொள்ளாக் காட்சி அன்றுதான் நடந்தேறியது. நபி (ஸல்) அவர்கள்
மதீனா வந்தடைந்த உடன் முஹாஜிர்களையும் அன்ஸாரிகளையும் அழைத்து ஒருவர்
கரத்தை மற்றொருவரின் கரத்தோடு இணைத்து சகோரத்துவ வாஞ்சையை விதைத்தார்கள்.
அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் ஒருமுகப்படுத்தினார்கள். சத்தியம்
மேலோங்க அழைப்பாளர்களாகவும் நீதி நெறியான ஆட்சி மலர உழைக்கும்
தியாகிகளாகவும் உருவாக்கினார்கள்.
அது இரு அணிகளின் இணைப்பல்ல! உலக மாந்தர்களின் உள்ளங்களை ஒன்றெனப் பிணைக்கும் சமுதாய ஒற்றுமைப் பிரகடனம்!
எனவே அந்த உள்ள இணைப்புகளை அல்லாஹ் தனது அருட்கொடைகளில் ஒன்றாக அறிமுகம் செய்கிறான்.
இறை நிராகரிப்பாளர்களாவும் எதிரிகளாவும் நரக விளிம்பில் இருந்தோர் இஸ்லாம்
எனும் பேரொளியால் மனிதர்களில் புனிதர்களாயினர். சமுதாய முன்னோடிகளாயினர்.
அசத்தியத்தின் ஆதிக்கமோ, சுயநலமோ, மனித சித்தாந்தங்களோ மனித சமூகத்தை ஒரு
போதும் ஒன்றிணைக்காது! சத்திய மார்க்கம் இஸ்லாமும் தியாகமும் பொறுமையும்
மட்டுமே ஒற்றுமை எனும் ஒளி விளக்கேற்றும்.
எனவே இஸ்லாம் நமக்கு படித்துத்தரும் ஒற்றுயை நாம் கடைப்பிடிப்பதில் கவணம் செலுத்த வேண்டும்.
ஒரு தாய் மக்கள் போன்று நம் மத்தியில் சகோதரத்துவம் அமைய வேண்டும். இஸ்லாம் இன்றளவு நம் மத்தியில் இருப்பதற்கு காரணம்
நபியவர்கள் காட்டிய ஒற்றுமைதான் என்பதை யாரும் மறுக்கவும் மறக்கவும் முடியாத உண்மைகள் .
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப்
போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும்
உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள்
புரிவானாக........


அஹமட் யஹ்யா,,,,ஹொரோவபத்தான,அனுராதபுரம்.
SRI LANKA......
*******************************************************
No comments:
Post a Comment