Followers

Monday, October 8, 2012

சகோதரத்துவம்..

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


சகோதரத்துவம்..
 சகோதரத்துவத்தை எவ்வாறு பேண வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாம் நமக்கு ஒரு பாடதிட்டத்தையே வழங்குகிறது. முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த விஷயங்களை கடைபிடித்தால் சகோதரத்துவம் மேலோங்கும், சகோதரத்துவம் பாதிப்படையாமல் இருக்க எந்த விடயத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மிக விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இஸ்லாம் உருவாக்க விரும்பும் சகோதரத்துவத்தின் உயரிய நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால்… ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும்.

”எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.” (திருக்குர்ஆன் 61:4)
ஈயத்தால் வார்த்து உருவாக்கப்பட்ட சுவர் எப்படி உறுதியானதாக இருக்குமோ, எவ்வளவு பிணைப்பாக, வலிமையாக இருக்குமோ, அதைப்போன்று முஸ்லிம்கள் தங்களுக்குள் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அந்த சுவரினுள் ஓட்டையோ, விரிசலோ விழாதவாறு பார்த்துக்கொள்வது ஈமான் கொண்ட ஒவ்வொருவருடைய பொறுப்பாகும்.
”உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது போர்த்துவீராக” (திருக்குர்ஆன் – 15:88)
ஒருமுறை நபிகளார்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உன் சகோதரனுக்கு உதவி செய்திடு., அவன் அநீதி இழைப்பவனாக இருந்தாலும் அநீதிக்குள்ளானவனாக இருந்தாலும் சரியே! அப்பொழுது ஒருவர் எழுந்து ஆட்சேபனை கிளப்பினார்....
அல்லாஹ்வின் தூதரே! அவன் அநீதிக்கு உள்ளானால் நான் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் தான். ஆனால் அவன் அநீதியாளனாக இருந்தால் அவனுக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்? இது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!
நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்: 'அநீதி இழைப்பதிலிருந்து அவனை நீ தடுத்திடவேண்டும். அது தான் அவனுக்கு நீ செய்யும் உதவி ' (நூல்: புகாரி)

ஒருவன் சகோதரத்துவம் என்ற பெயரில் தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டு மேலே சொன்ன சகோதரத்துவப் பயன்பாடுகளை எதிர்பார்த்தான் எனில் கானலைப் பார்த்து தண்ணீர் என ஏமாறும் நிலைதான் ஏற்படும். சகோதரத்துவத்திற்கென சிலநெறிமுறைகள் - நிபந்தனைகள் உள்ளன. அவற்றைப் பேணினால் தான் அவற்றின் பயன்களை அடைய முடியும்.

*) அல்லாஹ்வின் உவப்புதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'ஒரு மனிதர் வேறொரு கிராமத்தில் உள்ள தன் சகோதரனைச் சந்திப்பதற்காகச் சென்றார். அந்தப் பாதையில் அவனை எதிர்பார்த்திருக்குமாறு அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி வைத்தான். அங்கு அவர் வந்த போது மலக்கு கேட்டார்: நீ எங்கே செல்கிறாய்? அதற்கு அவர் இந்த ஊரிலுள்ள என் சகோதரரைச் சந்திக்கச் செல்கிறேன் என்றார். நீ அவருக்கு ஏதேனும் உபகாரம் செய்து அதற்கு கைமாறு பெற நாடுகிறாயா? என்று மலக்கு கேட்டார். அதற்கு அவர், அப்படி ஒன்றுமில்லை. அல்லாஹ்வுக்காக அவரை நான் நேசிக்கிறேன் என்றார். அப்பொழுது வானவர் சொன்னார்: ஒரு விஷயத்தை அறிவிப்பதற்காக அல்லாஹ்தான் என்னை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளான்;: நீ அவரை அல்லாஹ்வுக்காக நேசிப்பது போன்று அல்லாஹ் உம்மை நேசிக்கிறான் (நூல்: முஸ்லிம்)


*) இறையச்சத்துடன் சகோதரத்துவம் பேணிட வேண்டும். அதா வது, கடமைகளில் பொடுபோக்கும் தீமை நாடுவதும் தவிர்க்கப் படவேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர்' (49 :10). மேலும் இறையச்சத்தின் அடிப்படையில் அமையாத உறவுகள் அனைத்தும் பாழாகப் போய்விடும் என்பதை இவ்வாறு தெளிவுபடுத்துகிறது திருக்குர்ஆன்:
அந்த மறுமை நாளில் ஏனைய நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பகைவர்களாகி விடுவர்., இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களைத் தவிர! '(43: 67).

எனவே புகழாசை, அதிகார மோகம், பட்டம் பதவி போன்றவை குறுக்கிட்டால்; சண்டை சச்சரவு தான் வளரும்.
*) பிறர் நலன் நாடுதல் எனும் அடிப்படையில் அமைந்திட வேண்டும். ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்;:

'நான் நபியவர்களிடம், தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் கொடுத்தல், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுதல் ஆகியவற்றின் பேரில் விசுவாசப்பிரமாணம் செய்து கொடுத்தேன்' (புகாரி)

*) நன்மையான காரியத்திலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தின் முதன்மை நோக்கமும் இதுவே. இந்நிலை இல்லையெனில் அது, சகோதரத்துவம் வலுவிழந்து வருவதன் அடையாளமாகும்.
*) வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது. அதாவது, இது போன்ற சூழ்நிலைகளில் தம் சகோதரர்களின் நலனுக்காக அர்ப்பணமாகும் நிலை இருக்க வேண்டும்!

'உங்களில் எவரும் தனக்கு விருப்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாத வரையில் இறை நம்பிக்கையாளராக முடியாது ' (நூல்: முஸ்லிம்)
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள். (வாங்குவதில்லை எனும் நோக்குடன்) பொருள்களின் விலையைக் கூட்டாதீர்கள். ஒருவருக்கொருவர் கோபப்படாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். பிறரின் வியாபாரத்தைக் கெடுத்துக் கொண்டு வியாபாரம் செய்யாதீர்கள். நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் நல்லடியாளர்களாக, சகோதரர்களாகத் திகழுங்கள்! ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதி இழைக்க மாட்டான். மோசடி செய்ய மாட்டான். அவனை இழிவாகக் கருத மாட்டான். இறையச்சம் இங்கு உள்ளது என்று நபியவர்கள் தம் நெஞ்சைச் சுட்டிக்காட்டி மூன்று முறை சொன்னார்கள்! ஒரு மனிதன் தீயவன் என்பதற்கு தன் முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருவதுவதே போதுமானதாகும். ஒரு முஸ்லிமின் உயிர், உடைமை, தன்மானம் ஆகியவற்றிற்கு பங்கம் விளைவிப்பது எல்லா முஸ்லிம்களுக்கும் ஹராம் - தடுக்கப்பட்டதாகும். அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள். (முஸ்லிம்)

நற்குணம்தான் அன்பையும் பாசத்தையும் விதைத்து உள்ளங்களை இணைக்கும் பாலம். இணங்கிப்போகும் பண்பு தான் சகோதரத்துவத்தின் யதார்த்த நிலையாகும். இதனால் தான் நற்குணம் வளர்க்கிறது. ஆனால் பிணங்குவதென்பது ஒருவருக்கொருவர் முரண்படுவதென்பது தீய குணத்தின் விளைவாகும். அது உள்ளங்களில் கோபத்தையும் குரோதத்தையும் புறம்பேசும் போக்கையும் தான் உருவாக்கும்.
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: நற்குணத்துடன் மக்களிடம் பழகிடு. எவர், நரகத்திலிருந்து தூரமாக்கப் படவும் சுவனத்தில் புகுத்தப்படவும் விரும்புகிறாரோ அவர், அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட நிலையில் மரணத்தைச் சந்திக்கட்டும். மேலும் மக்கள் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோரோ அப்படியே மக்களிடம் அவர் நடந்துகொள்ளட்டும் (நூல்: அஹ்மத்)

பரஸ்பரம் உதவி செய்யாதிருப்பது, உரையாடும் பொழுது ஒழுங்கு முறை கடைப்பிடிக்காதிருப்பது, கண்ணியக் குறைவாக நடந்து கொள்வது, அளவின்றி விமர்சனம் செய்வது, வீணாகத் தர்க்கிப்பது, பொறுமையின்றி நடந்து கொள்வது, நான்கு பேருக்கு மத்தியில் புத்திமதி சொல்வது, கோள் மூட்டுபவர்கள் சொல்வதை உண்மையென நம்புவது, ரகசியத்தைப் பரப்புவது, தனிப்பட விவகாரத்தில் தலையிடுவது, சகோதரன் படும் துன்பத்தைக் கண்டு கொள்ளாதிருப்பது, சுய புகழ்பாடுவதுதில் அலாதி இன்பம் காண்பது, அதனூடாக தனது அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வது, தக்க காரணமின்றி வாக்களித்த நேரத்தில் சந்திக்காதிருப்பது, மனக் கவலையை, மனவருத்தத்தை அதிகப்படுத்தும் வகையில் பேசுவது ஆகியவை உறவைக் குலைத்து விடலாம். நோக்கத்தைப் பாழாக்கி விடலாம்.
அல்லாஹ்வின் நல்லடியாளர்கள் பற்றி குர்ஆன் ஓரிடத்தில் இவ்வாறு புகழ்கிறது:
தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும் கூட தங்களைவிடப் பிறருக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். உண்மை யாதெனில் யார் தங்கள் மனத்தின் உலோபித்தனத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றி பெறக் கூடியவர்கள் ஆவர்' (59 : 9)

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: அல்லாஹ்வுக்காக பரஸ்பரம் நேசம் கொண்டு வாழும் இருவரில் மிகச் சிறந்தவர் யார் எனில் எவர் தன் சகோதரனை அதிகம் நேசிக்கிறாரோ அவர்தான் ' (அல் அதபுல் முஃப்ரதில் இமாம் புகாரி)

”(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்” (திருக்குர்ஆன் 3:134)

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
அஹமட் யஹ்யா...
ஹொரோவபதான, அனுராதபுரம், SRI LANKA.
***************************************************
  

வட்டி ஹராம்...

 
 
 
 
 வட்டி ஹராம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.

வட்டி என்றால் என்ன ?

வட்டி என்பது நம்முடைய பணம் ஒருவரிடம் எவ்வளவு காலம் இருக்கிறதோ அதற்க்கு ஏற்ப ஆதாயம் தேடுவது. வேறு வார்த்தையில் வட்டியை விளக்குவதாக இருந்தால் நாம் ஒருவருக்கு கொடுக்கும் கடனை திருப்பி வாங்கும்போது அவர் எத்தனை காலம் நம் பணத்தை அவர் வைத்திருக்கிறார் என்பததை கணக்கிட்டு அதற்க்கு தனியாக வசூளிப்பதே வட்டியாகும்.நம்முடைய பணம் ஒரு குறிப்பிட்ட காலம் ஒருவரிடம் இருக்கிறது என்பதற்காக அவரிடமிருந்து ஒரு தொகையை தனியாக வசூலிப்பது நிச்சயமாக அநியாயமாகும்.ஒருவனுடைய ஏழ்மையையும் பணத்தாசையையும், கஷ்டமான நேரத்தை பயன்படுத்தி அவனுக்கு ஒரு தொகையை கொடுத்து அவன் எவ்வளவு காலம் கடன் பட்டு இருக்கிறானோ அந்த காலத்திற்கு ஏற்ப ஒரு தனி தொகையை வசூலிப்பதில் எந்த ஒரு ஞாயமும் இல்லை. இந்த அடிப்படையில் இஸ்லாம் வட்டியை முழுமையாக தடுக்கிறது.ஆனால் இன்றைய சூழ்நிலையில், அண்டா குண்டாவில் ஆரம்பித்து நகை, வாகனம்,வீடு கடைசியில் நாட்டையே அடகு வைத்து விடுகிற அளவிற்கு வட்டி எங்கும் பெருகி இருக்கிறது.
வட்டிக்கும் வியாபாரத்திற்கும் உள்ள வேறுபாடு


யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன் 2:275)


இஸ்லாத்தின் வட்டி


வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.எந்த குற்றத்திற்கும் இல்லாத அளவிற்கு வட்டியை, அல்லாஹ்வுடன் போர் செய்யும் ஒரு காரியமாக அல்லாஹ் தன் திருமறையிலே மனிதர்களுக்கு எச்சரிக்கிறான்.


'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)


வட்டி பெரும் பாவம்


பெரும்பாலான மக்கள் வட்டி வாங்குவதால் ,வட்டி இஸ்லாத்தில் தடுக்கப் படவே இல்லை அல்லது இஸ்லாம் வட்டியைப் பற்றி பேசவே இல்லை என்பதைப் போல் தோற்றம் உண்டாக்கி விட்டனர்.பெற்றோர்கள் வட்டி வாங்கக் கூடியவர்களாக இருக்கும்போது அவர்களுடைய குழந்தைகளுக்கு வட்டி தவறு என்று எப்படி சொல்வார்கள்?பெரும்பாலான மக்கள் செய்வதால் இஸ்லாத்தில் வட்டி அனுமதிக்கப் பட்டதாக ஆகாது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.


நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதும்ட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள்.


அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)

புஹாரி 6857

வட்டியினால் வந்த செல்வதில் அல்லாஹ்வின் அருள் இருக்காது என்பதை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு நமக்கு எச்சரிக்கின்றார்கள்.


அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் 2:276)


(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.(அல்குர்ஆன்
30:39)
வட்டியும்,மறுமையும்.


மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 4:161)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
"அவர் யார்?' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!" எனக் கூறினார்கள்."
அறிவிப்பாளர் : ஸமுரா(ரலி)
புஹாரி 2085


வட்டி சாபக்கேடு.


வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும், அதை எழுதிக் கொடுப்பவர்களையும், அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் (3258)

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.


அறிவிப்பாளர் : அபூ ஜுஹைஃபா(ரலி)

புஹாரி 5347


அல்லாஹ் கூறுகிறான்:

 
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)

இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)


(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).


வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)


வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)


வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.

இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:

மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)


வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!


வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)


இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.


ஹலாலும் தெளிவானது - ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்' என்பது நபி மொழி. (புகாரி)


இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.


இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.

நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன. ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

எனவே அல்லாஹ் நம்மைப்பாதுகாப்பானாக.!

இக்கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றுவானாக.!
ஹலாலாக உழைத்து ஹலாலை சாப்பிடக்கூடிய மக்களாக நம்மை மாற்றுவானாக.!
உயர்ந்த சுவர்க்கத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதற்ரு அருள் புரிவானாக.!
ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
 அஹமட் யஹ்யா,,   
ஹொரோவபதான, அனுராதபுரம்,SRI LANKA
********************************************************
                       
 

நல்லறம் செய்வோம் நமக்காக.....

◄▬▬▬๑๑۩♣★♣۩๑๑▬▬▬►
( ,¸.•*´¤°♣அஸ்ஸலாமு அலைக்கும்♣°¤`*•.¸,)
வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
❤♫❤♫❤.•*¨`*•..¸♥☼♥ ¸.•*¨`*•.♫❤♫❤♫❤.
அல்லாஹ்வின் சாந்தியும் ,சமாதானமும்
நம் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக
ஆமீன்.............
..❤♫❤♫❤.•*¨`*•..¸♥☼♥ ¸.•*¨`*•.♫❤♫❤♫❤
❤♫❤♫❤.•*¨`*•..¸♥☼♥ ¸.•*¨`*•.♫❤♫❤♫❤
 

நல்லறம் செய்வோம் நமக்காக.....
ஸலாம் கூறுதல்!


ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி.


நாவைப் பேணுதல்!


முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.
வாக்குறுதியை நிறைவேற்றுதல்!


“(நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்” (அல்-குர்ஆன் 17:34)


கோபத்தை அடக்குதல்!


“(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்” (அல்-குர்ஆன் 3:134)

 
பொறுமையைக் கடைபிடித்தல்!

“முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்-குர்ஆன் 3:200)


நயவஞ்சகத் தன்மைகளை விட்டும் விலகியிருத்தல்!


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முனாபிஃக்கின் அடையாளம் மூன்று. 1) பேசினால் பொய் பேசுவான்,2) வாக்குறுதியளித்தால் நிறைவேற்ற மாட்டான், 3) நம்பினால் மோசம் செய்வான். அறிவிப்பவர்:அபுஹுரைரா(ரலி), ஆதாரம் புகாரி,முஸ்லிம்.


பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுதல்!


“(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 24:30)


வறியவர்களுக்கு உதவுதல்!


“மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்” (அல்-குர்ஆன் 76:8)


விருந்தினரைக் கண்ணியப்படுத்துல், மற்றும் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழுதல்!


“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி.


பிறர் வீடுகளில் நுழைவதற்கு முன் வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெறுதல்!


“ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது)” (அல்-குர்ஆன் 24:27)


பெற்றோர்களைப் பேணுதல்!


“அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்-குர்ஆன் 17:23-24)


மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுதல்!


குணத்தில் அழகானவரே ஈமானில் முழுமையானவர். தன் மனைவியிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்பவரே உங்களில் சிறந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : திர்மிதி.

 
குடும்பத்தினர்களுக்கு செலவு செய்தல்!
 
தனது பொறுப்பிலுள்ளவர்களை ஒருவன் கவனிக்காமலிருப்பது அவன் பாவி என்பதற்கு போதுமான சான்றாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம் : அஹ்மத், அபூதாவுத்.
உறவினர்களைப் பேணுதல்!


“நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்” (அல்-குர்ஆன் 16:90)


உறவினர்களுடன் சேர்ந்திருத்தல்!


தமது வாழ்வாதாரம் (பொருளாதாரம்) விசாலமாக்கப்படுவதும்,வாழ்நாள் நீடிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) மற்றும்அனஸ் இப்னு மாலிக் (ரலி) ஆதாரம்:புகாரி


சகோதர முஸ்லிமுடன் நட்புறவு கொள்ளுதல்!


“அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.


முஸ்லிம்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துதல்!


நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்-குர்ஆன் 49:10)
அஹமட் யஹ்யா....
ஹொரோவபதான.
அனுராதபுரம்..
SRI LANKA.


 

பொக்கிஷங்களைப் புறட்டிப்பார்ப்போம்,,




 
பொக்கிஷங்களைப் புறட்டிப்பார்ப்போம்,,

பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!


 யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.


 நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!


நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!


 நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.


 நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!


 வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.


 சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.


ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!


 எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!


 நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!


 காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!


 இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!


யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!


 ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!


 பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!


 நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!


 உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!


 உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!


 வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.


 தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.


 உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!


செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்!


 அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!


வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!


 தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.


 பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.


கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!


 ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!


 சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அஹமட் யஹ்யா,,,
ஹொரோவபதான, அனுராதபுரம்,SRI LANKA.
.......................................................................................................
  

ஷைத்தான்

 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.
 
ஷைத்தான் 
 
அல்லாஹ் கூறுகிறான்: ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான். (அல்குர்ஆன் 35:6)

"பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் ஷைத்தான் கூறினான்). (அல்குர்ஆன் 7:16,17)

ஷைத்தானின் திறவுகோல்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!'' என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்'' என்று சொல். ஏனெனில், (இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே' என்பதைச் சுட்டும்) லவ்' எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழிவகுக்கும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5178)
 
ஷைத்தான் அழுகிறான்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவ னுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம் பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்'' என்று கூறியபடி விலகிச்செல்கிறான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்133)

ஷைத்தானின் ஓட்டம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்) அழைக்கப்படும்போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக்கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக்கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல் முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, "இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 608)
ஷைத்தானின் கேள்விகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்கல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, "இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், "உன் இறைவனைப் படைத்தவர் யார்?'' என்று கேட்கின்றான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிருந்து) விலகிக்கொள்ளட்டும். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3276)
ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு பெற
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சூரத்துல் பகரா ஓதப்டுகிற வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடுகின்றான் (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: லா இலாஹ இல்லல் லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல் ஷய்இன் கதீர் - என்று ஒரு நால் நூறு முறை சொல்கிறவருக்கு, பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் கிடைக்கும். மேலும் நூறு நன்மைகள் எழுதப்படும். (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும் அந்த நால் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது இருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3293)

"என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான். (அல்குர்ஆன் 15:39,40)
 பிளவு ஏற்படுத்துவான்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்ட)ன். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 5417)
சந்தோசப்படுகிறான்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ; அரேபிய தீபகற்பத்தில் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், நீங்கள் லேசாக கருதக்கூடிய அமல்கள் மூலமாக சந்தோஷப்படுகிறான். (நூல்: அஹ்மத்)
மந்திர முடிச்சு

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு' என்று கூறி (உங்களை விழிக்கவிடாமல் உறங்க வைத்து)விடுகிறான். நீங்கள் (அவனது கூற்றை ஏற்காமல்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் தொழுது விட்டால் முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகிறது. நீங்கள் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். இல்லையெனில் மனக்குழப்பத்துடனும், சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவீர்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1142)
இடது கையால் சாப்பிடுவான்
நீங்கள் சாப்பிடும் போது வலது கையால் சாப்பிடுங்கள் குடிக்கும் போது வலது கையால் குடியுங்கள். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் சாப்பிடுவான். குடிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3764)


தொழ விடமாட்டான்


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப் பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1144)


இப்படியும் செய்வான்..


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்கல் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3289)


ஷைத்தானின் தங்குமிடம்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:. ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூறாவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறா விட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்'' என்று சொல்கிறான். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 4106)
 
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
************************************************************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,அனுராதபுரம்,SRI LANKA
***************************************************
 
 

உள்ளம்




உள்ளம்
நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக் கின்றோம்.'' (அல்குர்ஆன் 95:4)

''உடலில் ஒரு தசைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால், அனைத்து உறுப்புகளும் சீராக அமையும். அதுவே இதயம்'' (அல் ஹதீஸ்)
படைப்புகளனைத்திலும் சிறந்த படைப்பாக அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள மனிதன் சிந்திக்கும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளான். இதுவே அவனின் சிறப்பாகும். ஏனெனில் தமது சிந்தனா சக்தி மூலம் படைத்தவனின் வல்லமையுணர்ந்து அவனுக்கு முற்றிலும் வழிபடுதலே அதனின் நோக்கமாகும்.

மனித உடலே ஒரு மாபெரும் விந்தையாகும். ஆகவே அதனை ''மாபெரும் உலகம்'' (ஆலமும் அக்பர்) என வர்ணிக்கப்படுகிறது. உலகில் நாம் காணும் அனைத்துப் படைப்புகளின் பிரநிதித்துவமும், மனித உடலில் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்.

மனித உடலினமைப்பும், அதன் உறுப்புகளின் இயக்கமும் பேரற்புத மாகும். களிமண்ணில் உருவாக்கப்பட்டுள்ள நமது உடலின் ஆராய்ச்சி, விந்தையின் சிகரத்திற்கே நம்மை இட்டுச் செல்லும்.
                                         
 இளைஞனே ... நீ
வீழ்ந்துகிடப்பது வீரமல்ல
சிலிர்த்து எழு
நாளைய நாட்கள்
உனக்கு வசந்த காலமாகட்டும்...
                                         

விழுந்ததற்காக
கவலைப்படாதே
விழுந்தால் தான்
நீ .... எழ முடியும்
எழுந்தால் தான்
சாதனைகள் உனக்கு
சந்தன மாலைகளாகும்...!
                                  

உன்னை நம்பு
உலகம் உனக்காக
காத்திருக்கிறது
செவிகளைத்திற
தன்னம்பிக்கை தென்றல்
உள்ளே வரட்டும்
இமைகளைத்திற
வெளிச்சம் உள்ளே வரட்டும்
இதயத்தைத்திற
வெற்றியின் விதைகள்
தன்னம்பிக்கையோடு
உன்னில் விதைக்கப்படட்டும்
சாதனைப்பூக்கள்
உன் முன் பூத்துக்குலுங்கட்டும் 

இன்று நீ
விழித்தால் தான்
நாளைய நாட்கள்
உனக்கு சாமரம் வீசும் ...!

தோல்விகள் உன்னை
துவட்டி எடுத்தாலும்
அவைகளை படிக்கட்டுகலாக்கு 
****************************************
அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான
அனுராதபுரம்.
SRI LANKA..
****************
 

ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோர்

 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.
ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வோர்

                                                                                   


அன்பான சகோதர, சகோதரிகளே! நம்மில் பலர் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத்தாக தொழுவதில் அலட்சிம் காட்டுகின்றனர். ஜமாஅத்தாக தொழுவதின் முக்கியத்துவத்தையும் அதை தவற விடுவதால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் ..
ஜமாத்அத் தொழுகைகளை விடுபவர்களுக்கான நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள்: -


“ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


கண்பார்வையற்றவருக்கே வீட்டில் தொழ அனுமதியில்லை: -
                                             

கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னை பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை. எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி, அவர் சென்று கொண்டிருக்கும் போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ஆம் என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்.


இயலாதவரைக் கூட கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்துவரவேண்டும்: -

                                                                 

ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப் போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டீர்களானால் நிச்சயம் வழிதவறிப் போவீர்கள். எவர் உளூச் செய்து - அதை நல்ல முறையில் செய்து இப் பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு - அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதிகளைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்க மாட்டார். திண்ணமாக இயலாதவரைக் கூட இரண்டு பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :முஸ்லிம்.

ஜமாஅத்தை விட்டு தனியாக தொழுபவர் ஷைத்தானின் பிடியில் எளிதில் அகப்பட்டுவிடுவார்: -

                                                                   

‘ஒரு பேரூரில் அல்லது சிற்றூரில் முஸ்லிம்களில் மூவர் மட்டுமே வாழ்ந்து, அங்கு ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்படவில்லையானால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் பெற்றுவிடுகிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதை இன்றியமையாததெனக் கொள்! ஏனென்றால், இடையனை விட்டும், மந்தையை விட்டும் விலகிச் செல்லும் ஆட்டையே ஓநாய் (எளிதில்) வேட்டையாடுகிறது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர் : அபுத் தர்தா (ரலி), ஆதாரம் : அபூதாவூது.

ஜமாஅத் தொழுகையை விடுவது முனாஃபிக் (நயவஞ்சகத்)தனம்: -

                                                                   

எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த நிலையில் மறுமைநாளில் அவனைச் சந்திக்க விரும்புகின்றாரோ அவர் - ஐவேளைத் தொழுகைகளை மிகவும் பேணுதலுடன் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றைப் பள்ளியில் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் உங்களின் தூதருக்கு ‘சுன்னத்துல் ஹுதா’வைக் கற்றுத் தந்துள்ளான். இத்தொழுகைகள்யாவும் அதனைச் சார்ந்தவைதாம். நயவஞ்சகர்கள் தம் தொழுகைகளை வீட்டில் இருந்துகொண்டு நிறைவேற்றுவது போல் நீங்களும் வீட்டில் இருந்தவாறே தொழுகைகளை நிறைவேற்றுவீர்களாயின் நீங்கள் திருத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையை விட்டுவிட்டால் நேரிய வழியை (ஸிராத்துல் முஸ்தகீமை) விட்டவர்களாகின்றீர்கள். ஆதாரம் :முஸ்லிம்.

தக்க காரணமின்றி ஜமாத் தொழுகையை விட்டுவிட்டால் அவனின் தொழுகை மறுமையில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: -

                                                                       

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன், முஅத்தின் (பாங்கு சொல்பவர் ) தொழுகைக்காக விடுக்கம் அழைப்பினைச் செவியேற்றதும் - அதன்பக்கம் விரைந்து வருவதிலிருந்து தடுக்கும் காரணம் எதுவுமில்லையானால், தனித்து நின்று நிறைவேற்றப்படும் அவனின் தொழுகை (மறுமைநாளில்) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.’

அப்போது தோழர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம், ‘காரணம் என்று கூறினீர்களே, அது என்ன? எவை எவை காரணங்களாக அமைய முடியும்?’ என வினவ, ‘அச்சமும் நோயும் தாம்!’ என்று பெருமானார் (ஸல்) விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அபூதாவூத்


ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: -


ஜமாஅத் தொழுகை தனியாக தொழுவதை விட இருப்பத்தி ஐந்து மடங்கு சிறந்தது. மேலும் வானவர்களும் ஜமாத் தொழுகைக்காக செல்பவர்களுக்காக பிரார்த்திக்கின்றனர்: -

                                                                          

“ஒருவர் தம் வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது, ஒருவர் உளூச் செய்து, அதை அழகாகவும் செய்து, பின்னர் தொழ வேண்டுமென்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் ‘இறைவா! நீ இந்த மனிதனின் மீது அருள் புரிவாயாக! உன்னுடைய கருணையை அவருக்குச் சொரிவாயாக!’ என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

ஜமாஅத்தாக தொழுபவரின் ஈமான் செழித்தோங்குகிறது: -

                                                                          

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘ஒருவன் தனித்து நின்று நிறைவேற்றும் தொழுகையைவிட மற்றொருவனுடன் சேர்ந்து நிறைவேற்றம் தொழுகை ஈமானின் வளப்பத்திற்கும் முன்னேற்றதிற்கும் காரணமாகின்றது. மேலும், ஒருவருடன் சேர்ந்து அவர் நிறைவேற்றும் தொழுகையைவிட இருவருடன் சேர்ந்து நிறைவேற்றும் தொழுகை மென்மேலும் ஈமான் செழித்தோங்கக் காரணமாகின்றது. இன்னும் எத்தனை அதிகப் பேருடன் மக்கள் தொழுகையை நிறைவேற்றுகின்றார்களோ அல்லாஹ்விடத்தில் அது மிகவும் உதந்ததாகும். (அந்த அளவு அல்லாஹ்வுடன் தொடர்பு வலுப்பெறும்.) அறிவிப்பவர்: உபைபின் கஅப் (ரலி), ஆதாரம் : அபூதாவூது

ஜமாஅத் தொழுகைக்காக நீண்ட தூரம் நடந்து வருபவர்களுக்கு அதிக நன்மையுள்ளது: -

                                                                       

‘யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். ஆதாரம் : புகாரி.

பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் சிறப்புகள்: -

                                                                         

நம்முடைய சகோதரர்களில் சிலர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுதாலும் இஷா மற்றும் பஜ்ர் தொழுகை நேரங்களில் பள்ளிக்கு வருவதற்கு அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அதிலும் குறிப்பாக பஜருடைய தொழுகையில் பள்ளியில் எண்ணிக்கை மிக சொற்பமாகவே காணப்படுகின்றது.

தவழ்ந்தாவது பள்ளிக்கு வருவார்கள்: -

                                                                              

“தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.
                                                                    
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
                                                                         
******************************************************************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான, அனுராதபுரம்,SRI LANKA.
###############################################################################