அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....
புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு
நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி
(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும்
உண்டாகட்டுமாக.
"பொறுமை"
வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் "பொறுமை"
என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. பொறுமை என்பது
இறைவனிடத்தில் இருந்து வருகின்ற ஓர் அருள் (ரஹ்மத்) ஆகும். பொறுமைக்கெதிரான
குணங்கள் "உணர்ச்சிவசப்படுதல்" அல்லது "கோபம் கொள்ளுதல்" என்பதை நன்கு
அறிந்திருந்தாலும், நடைமுறையில் இவற்றிற்கே பலர் அடிமையாக உள்ளனர்.
மனிதனுக்கு ஏற்படும் பல துன்பங்களுக்கு மூல காரணம் இக்கோபம் தான். இன்று
உலகெங்கிலும் நடக்கும் அநியாய சண்டை, சச்சரவுகள் மற்றும்
பேரிழப்புகளுக்குக் காரணம் இக்கோபமே!
காலத்தின் மீது சத்தியமாக!
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்! ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு
ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர்
உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர்
உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) எனும்
அல்குர்ஆனின் (103:1-3)
திருவசனத்தின் மூலம் இறைவன் உணர்த்தும் விஷயம்
என்னவென்று நாம் சிந்தித்ததுண்டா?
இறைநம்பிக்கையுடன்
நற்காரியங்களைச் செய்வது, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் நல்
உபதேசம் செய்வது ஆகிய குணங்களை இறைவன் இவ்வசனத்தின் மூலம்
உணர்த்துகின்றான்.
இவ்வுலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு மனிதன்
மேற்கண்ட இவற்றைச் சரியான முறையில் கடைபிடித்தால் ஏற்படும் உலக அமைதிக்கான
அடிப்படை விதிகளை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறான்.
அத்துடன், இம்மை, மறுமை எனப்படும் ஈருலகிலும் நஷ்டங்களைத் தவிர்க்கும்
சிறந்த வழிகளையும் தெளிவுபடுத்துகிறான்.
நிச்சயமாக ஷைத்தான்
மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் (சஹீஹ் புஹாரி, முஸ்லிம்) என்பதை
அறிவித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்தைத் தடுக்க இறைவனிடத்தில்
பாதுகாப்புத் தேடும் முறையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" வழக்கில் உள்ள சொல்லாகும். கோபத்தால்
புத்தி பேதலித்து சிந்திக்காமல் செயல்படுவதனால் வரும் பின் விளைவுகள்
வருத்தங்களாக, இழப்புகளாக முடிவதைக் காண்கிறோம்.
உதாரணமாக ஒருவன்
ஒரு பெண்ணைப் பார்த்துத் தவறாக எண்ணத்துடன் உணர்ச்சி வசப்படுவானாயின் பின்
விளைவுகளைப் பற்றி அக்கணத்தில் சிந்திக்காமல் பலாத்காரத்திற்குத் துணிந்து
விடுகிறான். தேர்விலோ, அல்லது வேலை வாய்ப்புகளிலோ தோல்வியைத் தழுவும்
ஒருவன் தவறுகளுக்கான காரணங்களைச் சிந்திக்காததினால் தற்கொலைக்குச் சென்று
விடுவதைக் காண்கிறோம்.
ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று உள்மனம்
எழுப்பும் கேள்விகளுக்கு விடையில்லாமல் இல்லை. ஏனெனில், அறிவுள்ள
சிந்தனைக்குத் தடை விதித்து கட்டுப்பாடற்று உணர்ச்சி வசப்படவைக்கும்
ஷைத்தானின் ஆட்சி மனிதனின் மனதிற்குள் நடந்து கொண்டிருக்கிறது. அலைபாயும்
மனதினைக் கட்டுப்படுத்த உணர்வலைகள் அடங்கி அறிவு மேலோங்கும் ஒரு நிமிட
நேரம் போதும். அதன் பின் தவறு இழைக்க எண்ணும் மனிதனின் மனதிற்குக் கடிவாளம்
கிடைத்துவிடும்.
கோபத்தைத் தணிக்க உங்களில் ஒருவருக்கு தான்
நின்று கொண்டிருக்கும் போது கோபம் ஏற்பட்டால் உடனே அமர்ந்து விடுவீராக:
இன்னமும் கோபம் அவரை விட்டு நீங்கவில்லை எனில் அவர் படுத்துக் கொள்ளட்டும்!
- அபூதர்(ரலி) நூல்: திர்மிதி என இறைத்தூதர் கூறிவிட்டுச் சென்றிருப்பதை
நினைவு கூர்வோம்.
வாழும் வரை நல்லவர்களாக வாழ்ந்து நாளை மறுமையில்
வெற்றி பெற்று சுவர்க்கம் என்ற அழகிய இடத்தை நாம் அடைவதற்கு அல்லாஹ் அருள்
புரிவானாக!
அஹமட் யஹ்யா
ஹொரோவபதான
அனுராதபுரம்
SRI LANKA





No comments:
Post a Comment