Followers

Tuesday, October 9, 2012

பதவியும்,பொறுப்பும்.அமானிதமே!

 
 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.
 

பதவியும்,பொறுப்பும்.அமானிதமே!
பெரும்பாலான மக்களால், பதவி என்பது அதிகாரம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் பதவி என்பது ஓர் அங்கீகாரமும் பொறுப்பும் ஆகும்.அதிகாரம், புகழ், செல்வம் ஆகிய காரணத்திற்காகவே அதிகமான மக்கள் பதவிக்காக ஆசைப் படுகிறார்கள். இம்மூன்று அம்சங்களையும் சரியான முறையில் பயன்படுத்தப் படுமேயானால் பதவியை எவரும் விரும்பமாட்டார்கள்.இந்த மூன்று அம்சங்களை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால்தான் மக்கள் பதவிக்காக போட்டி போடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. மறுமையை நம்பாத மக்கள் தான் தமக்கு கிடைக்கும் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பதவியை தவறாக பயன்படுத்தினால் இதற்க்காக மறுமையில் கேள்விக் கேட்கப்படும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடிய முஸ்லிம்கள்களும் பதவியை வைத்து தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதுதான் மிகவும் வேதனைக்குரியது.

இஸ்லாம் பதவியை, மறுமையில் அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய ஒரு கருவியாகத் தான் பார்க்கிறது. அதிகாரம் ,புகழ் ,செல்வம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்த வழி இருந்தும் அல்லாஹ்வுக்காக அதை உரிய முறையில் பயன்படுத்துவதால் உலகிலும் நற்பெயர் கிடைப்பதோடு மறுமையிலும் அதிக அந்தஸ்தை பெறலாம்.ஆயினும் பெரும்பாலானோர் இதை உணர்வதில்லை.கூட்டம் சேரும் வரை தவ்ஹீதில் இருந்துவிட்டு ,கூட்டம் சேர்ந்த பின் புகழுக்காகவும் பணத்தாசைக்காகவும் தவ்ஹீத் வளர்ச்சி எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று கூறி பதவியை தேடி ஓடியவர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள். பதவியை சரியாக பயன்படுத்துவோருக்குத் தான் அமானிதம் புறக்கணித்து தவறான வழியில் செல்வோருக்கு பதவி ஒரு சாபக்கேடு.

பதவி வகிப்பவர்கள் தம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக செயல்பட வேண்டும்.நம்முடைய தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்களே நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்கள்.உலக விஷயத்திலும் முக்கியமாக மார்க்க விஷயத்தில் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தால் நம்மால் பாதிக்கப் பட்டவர்களின் பாவத்தையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.எனவே நமக்கு கிடைக்கும் பதவியில் மிகவும் எச்சரிக்கையாகவும் நாம் ஒரு நல்ல முன் உதாரணமாகவும் விளங்கினால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம்.


'எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்' என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)
பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.

நமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம், சோதனை, உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும் ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம் அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும் அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.


இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' "நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது." (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7148)

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இறைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்." (நூல்: அஹ்மத் 22030)


மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர் களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)
மறுமையில் கேள்வி கணக்கிர்க்காக மஹ்ஷர் மைதானத்தில் நிருத்தப்படுவோம் என்பது அனைவரும் அறிந்ததே.அங்குள்ள ஒரு நாள் என்பது உலகில் 50,000 வருடங்களுக்கு சமமானதாகும். சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடுமையான வேதனை அடையும் அந்த நிலையில் ஏழு சாராருக்கு மட்டும் அந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து அல்லாஹ் தனது அர்ஷின் அடியில் நிழல் வழங்குவான்.அங்கு அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை அழகிய முறையில் பயன்படுதியவரும் ஒருவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

அல்லாஹ்தன்னுடைய(அரியணையின்)நிழ
லைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழுபேருக் குநிழல் அளிப்பான்:

1. நீதிமிக்க ஆட்சியாளர்.


2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.


3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்).


4. பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.


5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்


6.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.


7. தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி 6806)


அதேபோல் தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்துபவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான்.
அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 30:7)

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்." (நூல்: புகாரி 7138)
தம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர். நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக் குரானில் கூறப்பட்டுள்ள இந்த சாம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.
'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!" என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!" என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!" என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!" என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்!" என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2272)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)


நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)


அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்''. (அல்குர்ஆன் 110:1-3)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5: 8 )


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான,அனுராதபுரம், SRI LANKA
****************************************************
  

No comments:

Post a Comment