Followers

Thursday, October 11, 2012

கணவன் மனைவி...

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


கணவன் மனைவி...

இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது. மாறாக மணவாழ்வு ஆன்மீகப் பாதைக்கு எதிரானது என்பதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணம் நிறைவேறுவதற்கென்று சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் விதிக்கவில்லை. உறுதியான உடன்படிக்கை செய்துகொண்டு, மணமக்கள் இருவரும் வாழ்க்கையில் இணைவது இஸ்லாமியத் திருமணம்.

”மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களை, பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.” (திருக்குர்ஆன், 4:1)

”உங்களில் யார் பராமரிப்புச் செலவுக்குச் சக்திப் பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் (பிற பெண்களை நோக்குவதை விட்டும்) பார்வையைத் தடுக்கக் கூடியதாகவும், கற்பைக் காக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.” (நபிமொழி)
மனித இன மறு உற்பத்தியாகச் சந்ததிகளைப் பெற்றுக் கொள்வது. கற்பு நெறியுடன் ஒழுக்கமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. இதுவே மணமுடிக்கும் நோக்கத்தின் மிக அவசியமாக இங்கு சொல்லப்படுகிறது.

கணவனின் கைகளில்தான் மனைவியின் சொர்க்கம் இருக்கிறது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்ணே நீ உன்னுடைய கணவனுக்குச் செய்யும் கடமைகளில் ) என்னிலையில் இருக்கின்றாய் என்பதைக் கவனித்துக் கொள். நிச்சயமாக அவர் ஒன்று உன்னுடைய சொர்க்கமாக இருப்பார். அல்லது நரகமாக இருப்பார். நூல் : அஹ்மத் (18233)
அதாவது கணவனுடைய கடமைகளை முறையாக நிறைவேற்றுகின்ற பெண் அதன் காரணமாக சுவர்க்கம் செல்வாள். முறையாக நிறைவேற்றாத பெண் அதன் காரணமாக நரகம் புகுவாள்.

நல்ல மனைவியே மேலான செல்வம்
”இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச்
செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911


இஸ்லாமிய பெண்களில் சிறந்தோர் .
1. ஃபிர்அவனின் மனைவி ஆசியா, 2.மர்யம்
இப்னத் இம்ரான் 3. கதீஜா பின்த் குவைலித் 4 பாத்திமா பின்த் முஹம்மது ‘என
நபி பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் - ஆதாரம் : புகாரி,
திர்மிதி


அன்னை ஆசியா.
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு பிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக
கூறுகிறான். அவர் ”இறைவா! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் வீட்டைக்
கட்டித்தருவாயாக இன்னும் பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும்
என்னைக் காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும்
என்னைக் காப்பாற்றுவாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார் (66-11)


அன்னை மரியம் (அலை)

அவளுடைய இறைவன் அவள் பிரார்த்னையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்.
அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை
ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த
மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு
இருப்பதைக் கண்டார், “மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?”
என்று அவர் கேட்டார். ” இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக
அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்
பதில் கூறினாள் திருக்குர்ஆன் 3:37

அன்னை கதீஜா (ரலி)

பெண்களுக்கு அன்னை கதிஜா (ரலி) அவர்களிடம் நிறைய படிப்பினை இருக்கின்றது.
ஒரு பெண் எவ்வாறு தன் கணவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை இந்த
அம்மையாரை மிஞ்சக்கூடியவர்கய் யார் இருக்கின்றனர். செல்வச் செழிப்பில்
தழைத்து விளங்கிய இந்த அம்மையார் தன்னிடம் வேலை பார்த்து வந்த முஹம்மது
என்ற அந்த அழகிய நற்குணம் கொண்ட மனிதரை திருமணம் முடித்துக்கொண்டார்.
தான் கைம்பெண்ணாக இருந்த நிலையிலும் அழகான குணம் கொண்டவர்தான் தனக்கு
கணவனாக வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். இந்த நற்குணம் கொண்ட
அம்மையாரின் அழகிய எண்ணத்திற்கு தகுந்தவாறு முஹம்மது என்ற நல்ல மனிதர்
முஹம்மது நபி என்ற அழகிய பட்டத்தை பெற்றாரே இது ஒருவகையில் அல்லாஹ்வின்
அருள் என்பது புரிகிறது.


(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
(96:1)

மனிதனை (அட்டை பூச்சி போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரத்த

கட்டியிலிருந்து) அவன் படைத்தான். (96:2)

என்ற இறைவசனத்தை வஹீ மூலம் வந்தது நபி(ஸல்) பயந்து
விறைந்தவராக வீட்டுக்கு வந்து கதிஜா(ரலி)யிடம் என்னைப் போர்த்துங்கள்
என்னைப் போர்த்துங்கள் எனக்கூற கதிஜா(ரலி) அவர்கள் அல்லாஹ் உங்களை ஒரு
போதும் கைவிடமாட்டான். ஏனெனில் நீங்கள் உறவினர்களை ஆதரிக்கிறீர்கள்,
வறியோர்க்கும் தேவையுடையோர்க்கும் உதவுகிறீர்கள், விருந்தினரை
உபசரிக்கிறீர்கள் நலிந்தோரின் சுமைகளை சுமக்கிறீர்கள் என ஆறுதலும்
தேறுதலும் கூறி தம் உறவினரான வரகா பின் நவ்ஃபல் என்ற கிறிஸ்தவ அறிஞரிடம்
அழைத்துச் சென்று நபிகளுக்கு நேர்ந்ததை கூற அவர் நபிகளை நோக்கி ‘அல்லாஹ்
மூஸா(அலை)அவர்களிடம் அனுப்பிய அதே ஜிப்ரீல் (அலை) அவர்களைத்தான்
உம்மிடமும் அனுப்பியிருக்கிறான்’. நீர் அல்லாஹ்வின் தூதரே! என
உறுதிப்படுத்தினார். (புகாரி)


ஒருமுறை நபிகள் (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல்(அலை)அவர்கள்
வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில்
குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து
கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின்
தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு
சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை
ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி)

இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார்.
(தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். புஹாரி: 3432 அலீ (ரலி).

அன்னை ஆயிஷா (ரலி)

ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில்
ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர
வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு
எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப்
போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி:3411 அபூ மூஸா
(ரலி).

நல்ல தந்தைக்கு உதாரணம் நபிகளார் (ஸல்)
என் மகள் பாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவரை
வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை
மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப் படுத்துவதாகும் என்று
சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரழி) நூல்: ஸஹீஹ்
முஸ்லிம் (4839)


கணவன் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்

ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) உங்கள் விளைநிலங்கள் உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்றுகொள்ளுங்கள். (அவளை கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே அவளை அசிங்கமாகத் திட்டாதே நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய் நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு. வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே. , நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள். (நூல் : அஹ்மத் (19190)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய ) உபதேசங்களை கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத்தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களை படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும். நூல் திர்மிதி (1083)

மனைவியை வெறுப்பது கூடாது

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான் (அல் குர்ஆன் 4 : 19 )
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கை கொண்ட ஒரு ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கொண்டு திருப்திகொள்ளட்டும். நூல் : முஸ்லிம் 2915
மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

நபி (ஸல்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா ? (அதுதான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன் ) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள். நூல் அபூதாவூத் ( 1417 )
இன்றைய கணவன் மனைவிகளை உற்று நோக்கும் போது ஏற்றத்துக்கு
மாற்றமான முறைகளில் கணவன் மனைவி வாழ்கை மிக வேகமாக
போகிறது. கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய மனைவி இன்று மனைவிக்கு கட்டுப்பட்டு வாழ்கின்ற வாழ்கைகள் காணப்படுகின்றது.
இதற்கு காரணம் அவர்களில் வீடுகளில் ஷைத்தானின் அமர்விடம். டீவீ.
இதுதான் இன்று குடும்ப வாழ்கை சீர் கெட்டுப்போவதற்கு முதல் காரணம் என்பதை யாராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
நபியவர்கள் காட்டிய குடும்ப வாழ்க்கை இனிமையான இஸ்லாத்தின்
சாரலில் அமைந்தது .


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன். (ஏனென்றால் அந்த அளவிற்கு அவள் தன்னுடைய கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கே தவிர யாரும் யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது) நூல் : திர்மிதி (1079)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு பெண் மனிதர்களில் யாருக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறாள் ? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவளுடைய கணவனுக்கு என்று கூறினார்கள் நூல் : ஹாகிம் (7244)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். நூல் : புகாரி( 2554)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஒட்டகத்தில் பயணம் செய்யும் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாவர். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக்காப்பவர்கள் ஆவர். நூல் : புகாரி (5365)


நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் எனக்கு நரகம் காட்டப்பட்டது . அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக்கிறார்கள் . அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து. பின்னர் (அவளுக்கு பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானாள் உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை. என்று பேசிவிடுவாள். என்றார்கள் நூல் : புகாரி (29)
நஊது பில்லாஹ் அல்லாஹ் காப்பாற்றுவானாக..

கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்தை நபியவர்களின்
பொன்மொழிகள் நமக்கு ஒரு பாடமாகவும், சுவர்க்கம் நுழைய
எளிதான வழிமுறைகலையும் நமக்கு காட்டி இருக்கின்றார்கள்.
எனவே நமது குடும்ப வாழ்க்கையில் குறிப்பாக கணவன்,மனைவி
என்ற ஸ்தானத்தை மிக முக்கியமாக கவனம் செலுத்துவது ஒவ்வொரு
கணவனின்,மனைவியின் பொறுப்பாகும்..

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
 
 ******************************************************
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான,அனுராதபுரம், SRI LANKA
*************************************************
   

உன் வாழ்வு....


உன் வாழ்வு....

** அற்பமானது என்று எண்ணி எந்த
         தீமையையும் பின் பற்றாதே!
             அற்பமானது என்று எண்ணி எந்த
                    நன்மையையும் அலட்சியம் செய்யாதே!



** மென்மையான சொற்கள் 
        வன்மையான சொற்களால் 
            வெல்ல முடியாது,,,,
              மென்மையான சொற்களால் வெல்ல     
                    முடியும்...

                                        

** ஆடம்பரம் கலந்த வாழ்வுதான் அற்ப வாழ்வு...
      உயர்ந்த தன்மைக்கு முதல் அடையாளம் 
          எளிமை...

                                            

** இன்பத்தின் இரகசியம் ...நீ...
        விரும்புவதை செய்வதில் அல்ல,,,
           செய்வதை விரும்புவதில் தான் உள்ளது...

                               
ஆனால் அன்பு அருமையானது
     விலை மதிப்பற்றது...... 
**************************************** 

அஹமட் யஹ்யா
ஹொரோவபதான
அனுராதபுரம்
SRI LANKA

Wednesday, October 10, 2012

நண்பன்.

 அல்லாஹ்வின் பெயர் கொண்டு....

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4760)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: திர்மிதி (1867) 

அழகிய நட்பு இறைவனுடைய பொருத்தத்தைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளதால். எனவே நட்பின் ஒழுங்குகளை அறிந்து அதன்படி செயல்படுவோம்.
நல்ல நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால்…

அஹமட் யஹ்யா....
ஹொரோவபதான,அனுராதபுரம், SRI LANKA
 

புறம் என்றால் என்ன?

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


புறம் என்றால் என்ன?

புறம் என்றால் என்ன என்பதற்கு சிறந்த ஒரு விளக்கத்தை நாம் சொல்லுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களே எமக்கு சொல்லிக்காட்டினார்கள்.

“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, ‘அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ ” என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்)” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான அருட்கொடைகளை கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முக்கியமானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே
காணக்கூடியவையாக இருக்கின்றது.


இந்த உறுப்புக்களின் உரிமையாளனுக்கு உகந்ததாக அவற்றைப் பாவிப்பதும் அவனுக்கு இகந்ததாக பாவிக்காமல் இருப்பதுமே நாம் அவனுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.இறைவன் அருளிய உறுப்புக்களைக் கொண்டு இறைவனுக்கே விரோதமாக செயல்படுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில், ‘உங்களில் நஷ்டவாளி யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) ‘எங்களில் (எவர்களிடத்தில்) தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதிவாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளி என்று குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஜக்காத் போன்ற நல்லறங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து, ‘இவன் என்னை ஏசியவன், நான் செய்யாத விஷயத்தை என் மீது சுமத்தியவன், எனது செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்கள் ஓட்டியவன், அடித்தவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்த பிறகு அவர்களின் தீமைகளிலிருந்து எடுக்கப்பட்டு இம்மனிதனுக்கு கொடுக்கப்படும். இவ்வாறு அவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான். (ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு கொடுக்கப்படும் கூலியை தெளிவாகவே கூறுகின்றது. ஒருவன் இவ்வுலகில் எவ்வளவு தான் நற்காரியங்கள் செய்தாலும் அவனது புறம் பேசுதலுக்கு மறுமையில் ஒன்றுமே ஈடாகாது என்பதனையும் நாம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். ஆகையால், முதல் காரியமாக நாம் மற்றவர்களின் குறைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து பிறரிடம் கூறி புறம் பேசிய பாவத்திற்கு ஆளாவதை விட்டுவிட்டு நமது குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றைக் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். நம்மை நரக வேதனையில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பெருமுயற்சி எடுக்க வேண்டும்.

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

ஏன் அல்லாஹ் மரணித்த சகோதரனின் இறைச்சியை புசிப்பதை புறம் பேசுவதோடு ஒப்பிடவேண்டும்?

ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனைப் பற்றி அவன் அங்கில்லாத போது குறை கூறுகின்றபோது குறை கூறப்படுகின்ற மனிதனால் நிச்சயமாக அதைத் தடுக்க இயலாது. இதே போன்று தான் மரணித்த ஒருவரின் மாமிசத்தை வெட்டும் போதும் மரணித்தவனால் அதனை தடுக்கமுடியாது! புறம் பேசுவதும் இதே போன்று ஒரு கொடுமையான செயல் என்பதை நாம் விளங்க முடியும். மேலும் வசனத்தின் இறுதியில் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், பிறரின் குறைகளை கூறி புறம்பேசுவதை விட்டும் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ள வேண்டும். இவ்வாறு குறை கூறி இருந்தால் இத்தகைய பெரும்பாவத்திலிருந்து மீண்டு வந்து தவ்பா செய்ய வேண்டும் என்பதை இவ்வசனம் போதிக்கின்றது.


நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும், அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும்.

இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும்.


நாம் பேசும் போது அளந்து பேச வேண்டும்.

நாம் பேசுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும்.

நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும்

ஆடுகின்ற,அசைகின்ற ஒவ்வொரு செயலும் நமது பதிவுப்புத்தகத்தில்
எழுதப்படுகின்றன என்று நன்றாக உணர வேண்டும்.

நாம் மிகுந்த கவனமுடன் நடந்துக்கொண்டு நமது நாவைக் கட்டுப்படுத்தி மறுமையில் நஷ்டவாளியாவதை விட்டும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.


நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாகவே இருக்க வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்•மூடி இருக்கட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும் அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி

ஆதாரம் புஹாரி (6475)


இந்த நபிமொழிக்கு ஒப்ப நமது பேச்சுக்கள் அமைய வேண்டும்.

புறம் பேசுதல் கோள் சொல்லுதல் பொய் பேசுதல் அவதூறு சொல்லுதல் பொய் சாட்சி சொல்லுதல் செய்த உதவியை சொல்லிக் காட்டுதல் சபித்தல் இறந்தவர்களை ஏசுதல் காலத்தைத் திட்டுதல் போன்ற இறைவனுக்கு வெறுப்பான தீயகாரியங்களில் நாவை நாம் பயன்படுத்தினால் அது நமக்கு மறுமையில் விரோதியாக மாறி விடுகின்றது.


நாவடக்கத்தை இஸ்லாம் ஓர் இனிய பண்பாக மட்டும் பார்க்காமல் இறை நம்பிக்கையின் ஒரு அங்கமாகவே பார்க்கின்றது.நாவைக் கட்டுப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையுடன் தொடர்பு படுத்துவதால் உண்மை முஃமின் இது விடயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது.


நபி (ஸல்) அவர்களிடம் .இறைத்துதர் அவர்களே! நான் உறுதியாகச் செயல்படுத்த வேண்டிய ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள் என்றேன் என் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறுவீராக! அதில் உறுதியாக இருப்பீராக என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள். இறைத்துதர் அவர்களே என்னிடம் நீங்கள் அதிகம் பயப்படுவது எது? என்று கேட்டேன்.உடனே அவர்கள் தன் நாவைப்பிடித்து இது தான் என்றார்கள்.
அறிவிப்பவர் சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
ஆதாரம் இப்னு மாஜாஹ் (3972)


நாவு மனித உறுப்புக்களில் பயங்கரமானது அதை கையாளவேண்டிய விதத்தில் கையாள வேண்டும். இல்லாவிட்டால் இது சுவர்க்கத்திற்கு பதிலாக நரகப் படுகுழிக்கு கொண்டு சென்று விடும்.

நம்முடைய ஏனைய உறுப்புகள் நாவைப்பார்த்து சொல்லகிறது

நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம்! நீ வளைந்து இருந்தால் நாங்களும் வளைந்து விடுவோம்!


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: மனிதன் காலைப்பொழுதை அடைந்தவுடன் அவனது எல்லா உறுப்புகளும் நாவிடம் "நீ எங்களுடைய காரியத்தில் அல்லாஹுத்த ஆலாவை அஞ்சிக்கொள். ஏனெனில் எங்களுடைய காரியங்கள் உன்னுடன் தான் இணைந்துள்ளன. நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ வளைந்து இருந்தால் நாங்களும் வளைந்து விடுவோம். (பிறகு அதற்குறிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்) என்று மிகவும் பணிவுடன் வேண்டுகின்றன. (அறிவிப்பாளர்: ஹளரத் அபூ ஸஈத் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "அடியான் தனது நாவை பாதுகாக்காதவரை ஈமானுடைய அந்தரங்கத்தை அடைந்து கொள்ள முடியாது. (அறிவிப்பாளர்: ஹளரத் அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: மஜ்மவுஜ்ஜவாயித்)

ஒருமுறை உக்பத் இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு எனும் தோழர் "இறைத்தூதர் அவர்களே! ஈடேற்றம் பெற என்ன வழி?" என்று வினவுகின்றார். அதற்கு அண்ணலம் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உமது நாவை கட்டுப்படுத்திக் கொள்ளும். உமது பாவங்களை நினைத்து அழுதுகொண்டிருப்பீராக" என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

உண்மை பேசவேண்டும்.

அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். 5:119

அன்பாகப் பேசவேண்டும்.

அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. 4:36

வீண் பேச்சை தவிர்க்க வேண்டும்.

நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும். 6:68

பொய் பேசக்கூடாது.

உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். 16:116

நேர்மையாகப் பேச வேண்டும்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
அழகானதைப் பேசுக!பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். 2:83


மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ‘சிறப்பிடத்தைப்’ பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ‘மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்’ பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள்.
‘எதைப் பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும்’. (அல்குர்ஆன் 17:36)
நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு உரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)
 
ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்
மனிதர்கள் கூட்டமாக கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலாரும் அடுத்தவரைப் பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.

அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் கூறுகின்றார், “‘அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்’ என்று நான் கேட்டேன். ‘யாருடைய நாவை விட்டும், கையை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகின்றனரோ அவர்தான் உண்மை முஸ்லிம்’” என நபியவர்கள் கூறினார்கள் [நூற்கள்: புகாரி, முஸ்லிம்].

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
 அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான, அனுராதபுரம், SRI LANKA
 

வியாபாரம்..

 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


வியாபாரம்..

இஸ்லாத்தில் மனிதனின் பொருளாதார வாழ்வு, உறுதியான அடிப்படை, தெளிவான இறைவழி காட்டுதல் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. தனது வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையானவற்றை நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது ஒருவனின் கடமை என்பது மட்டுமல்ல, மாட்சிமைமிக்க சிறந்த நற்குணமுமாகும்.

உழைத்திடும் திறன் இருந்தும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் அடுத்தவர்களை அண்டிப் பிழைத்திடுவது மார்க்கத்தின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகும். அது ஒரு அவமானமுமாகும். ஒரு முஸ்லிம் தனது உழைப்பாலேயே தனது வாழ்க்கையை நடத்திட வேண்டும். யாருக்கும் ஒரு சுமையாக அவன் இருந்திடக் கூடாது. இது இறைவனின் கட்டளையாகும்.

அனுமதிக்கப்பட்ட எந்த வியாபாரத்தில் ஈடுபடும்போதும் கவனத்தில்கொள்ளவேண்டிய சில அம்சங்களை இஸ்லாம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவற்றைப் புறக்கணித்து நடக்கும் வியாபாரிகள் மறுமையில் பாவிகள் கூட்டத்தில் எழுப்பப்படுவர்

* அளவை நிறுவையில் மோசடி செய்தல்

அளவை நிறுவையில் முறையாக நடந்து கொள்ளவேண்டும்.

அளவை நிறுவையில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்துகொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுக்கும்போதும்; நிறுத்துக் கொடுக்கும்போதும் குறைத்துவிடுகின்றனர். மகத்தான ஒரு நாளில் நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா? அந்த நாளில் மனிதர்கள் அகிலத்தின் இறைவன் முன் (விசாரணைக்காக) நிற்பர். (83: 1 - 6)

விற்றல், வாங்கல் நடவடிக்கைகளில் விட்டுக்கொடுத்து நிதானமாக நடந்து கொள்ளவேண்டும்.

"விற்கும்போதும் வாங்கும்போதும் தன் உரிமையைக் கோரும்போதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக" என்று நபியவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். (புஹாரி, திர்மிதீ)

* வியாபாரத்தில் சத்தியம் செய்தல்.

"நிச்சயமாக வியாபாரிகளே பாவிகள்" என நபியவர்கள் குறிப்பிட்ட போது "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி இருக்கிறான் அல்லவா" என்று ஸஹாபாக்கள் வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம். எனினும், அவர்கள் சத்தியம் செய்து பாவம் செய்கின்றார்கள். பேச்சில் பொய் சொல்கிறார்கள்" என்று கூறினார்கள். (அஹ்மத்)
வியாபாரப் பொருள்களின் தன்மைகள்.

1. சுத்தமானதாக இருத்தல்

2. பயனுள்ளதாக இருத்தல்


3. விற்பவருக்குச் சொந்தமானதாக இருத்தல்


4. பண்டத்தை வாங்குபவருக்கு ஒப்படைக்கும் சக்தி இருத்தல்


5. பண்டமும், அதன் விலையும் குறிப்பாக அறியப்பட்டிருத்தல்


6. கையிருப்பில் உள்ளதாயிருத்தல்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு பெண் தம் வீட்டிலுள்ள உணவைப் பாழ்படுத்தாமல், (பசித்தவர்களுக்குக் கொடுத்து) செலவு செய்தால் (அப்படி) செலவு செய்ததற்காக (அவளுக்குரிய) நற்கூலி அவளுக்கு கிடைக்கும். (அந்த உணவைச்) சம்பாதித்தற்கான நற்கூலி அவளுடைய கணவனுக்கு உண்டு. கருவூலப் பொறுப்பாளருக்கும் அதுபோல் (நற்கூலி) கிடைக்கும். ஒருவர் மற்றவரின் கூலியில் எதனையும் குறைத்து விடமாட்டார்" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

"ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்" என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்.


"ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என மிக்தாம்(ரலி) அறிவிக்கிறார்கள்.


"பிறரிடம் யாசகம் கேட்படை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விறகச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" இதை அபூ ஹுரைரா(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) இருவரும் அறிவிக்கிறார்கள்.


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக...
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான, அனுராதபுரம்,SRI LANKA.
***********************************